வீதியில் சென்றுகொண்டிருந்த காரொன்றை மறித்து சோதனையிட்டபோது, காருக்குள் பசுவொன்று இருப்பதைக் கண்டு போக்குவரத்து பொலிஸ் உத்தியோகஸ்தர் அதிர்ச்சியடைந்த சம்பவம் போலந்தில் இடம்பெற்றுள்ளது. ஸிபிக்னிவ் கிரபோவ்ஸ்கி (53) எனும் விவசாயி, மிருக வைத்தியர் ஒருவரிடம் தனது பசுவை காண்பித்துவிட்டு, அதை மீண்டும் தனது பண்ணைக்கு காரில் ஏற்றிச்சென்றுகொண்டிருந்தார்.
அவ்வழியே சென்றுகொண்டிருந்த ஏனைய சாரதிகள், பயணிகளும் அந்த காரை வியப்புடன் பார்த்தவாறு சென்றனர். பின்னர் போக்குவரத்து பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர், இக்காரை வழிமறித்தபோது, அதற்குள் பசுவொன்று இருப்பதைக்கண்டு அதை வெளியே எடுக்குமாறு உத்தரவிட்டார்.
பசுவை ஏற்றிச்செல்வதற்கு வசதியாக இக்காரில் மாற்றங்கள் செய்திருப்பதாக பிரபோவ்ஸ்கி கூறினார். எனினும், அவ்வாறு பசுவை காரில் ஏற்றிச்செல்வது ஆபத்தானது என பொலிஸார் விளக்கியதுடன் கிரபோவ்ஸ்கிக்கு அபராதம் விதித்ததாக போலந்து பொலிஸ் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.