1912 ஆம் ஆண்டில் அத்திலாந்திக் சமுத்திரத்தில் பனிப்பாறையில் மோதி விபத்துக்குள்ளாகி மூழ்கிய டைட்டானிக் கப்பலிலிருந்து சேதமடையாத நிலையில் பெறப்பட்ட பிஸ்கட் ஒன்று பிரித்தானியாவில் இடம்பெற்ற ஏலவிற்பனையில் 15,000 ஸ்ரேலிங் பவுண் விலைக்கு விற்பனையகியுள்ளது.
வில்ட்ஷியரிலுள்ள ஹென்றி அல்ட்றிட்ஜ் அன்ட் சண்ஸ் ஏலவிற்பனை நிலையத்தில் இடம்பெற்ற ஏலவிற்பனையிலேயே இந்த உலகின் பெறுமதிமிக்க பிஸ்கட் என அழைக்கப்படும் பிஸ்கட் விற்பனையாகியுள்ளது.
இந்த பிஸ்கட் ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்ட விலையிலும் 5,000 ஸ்ரேலிங் பவுண் அதிகமான தொகைக்கு விற்பனையாகியுள் ளது. கிரேக்கத்தை சேர்ந்த பெயரை வெளியிட விரும்பாத நபரொருவர் இந்த பிஸ்கட்டைக் கொள்வனவு செய்துள்ளார்.
டைட்டானிக் கப்பல் அனர்த்தத்தில் அதில் பயணம் செய்த 1,500 பேர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த பிஸ்கட்டானது டைட்டானிக் கப்பலிலிருந்த உயிர் காப்புப் படகொன்றில் இருந்த நிலையில் மீட்கப்பட்டது.
மேற்படி பிஸ்கட் அந்த உயிர் காப்புப் படகில் பயணித்த ஜேம்ஸ் பென்விக் என்ற பயணியுடையதாகும்.