சமையலறை ஒவன் உபகரணத்தை சுத்திகரிப்பதற்கான இரசாயன திரவத்தை அருந்திய பாலகனொருவனின் உடல் உள் உறுப்புகள் கடுமையான எரிகாயங்களுக்கு உள்ளானதுடன் அவனது சிறுநீரகங்களும் செயலிழப்புக்கு உள்ளாகிய விபரீத சம்பவம் பிரித்தானிய பிர்மிங்ஹாமில் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் பிரித்தானிய ஊடகங்கள் ஞாயிற்றுக்கிழமை செய்திகளை வெளியிட்டுள்ளன. எலியஹ் மோலி என்ற மேற்படி பாலகனின் (ஒரு வயது) தந்தையான ஜிம்மி ஒவன் உபகரணத்தை சுத்திகரித்துக் கொண்டிருந்த போது, அங்கு தவழ்ந்து வந்த பாலகன் மேற்படி சுத்திகரிப்பு இரசாயன திரவத்தை அருந்தியுள்ளான்.
இதனையடுத்து உடனடியாக மோலி, பிர்மிங்ஹாம் சிறுவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான்.அங்கு அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட பாலகனுக்கு அவனது சுவாசத் தொகுதியில் ஏற்பட்ட பாதிப்பை சீர்செய்ய சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இதனையடுத்து பாலகன் தனது முதலாவது பிறந்தநாளை மருத்துவமனையில் கொண்டாட நேர்ந்துள்ளது.வீட்டுப் பாவனை இரசாயனத்தை உரிய முறையில் கவனமாக கையாளத் தவறி தமது சின்னஞ்சிறு மகனுக்கு தாம் பாரிய பாதிப்பை ஏற்படுத்தியதையிட்டு தாம் பெரிதும் துயரமும் குற்ற உணர்வும் அடைந்துள்ளதாக பாலகனின் பெற்றோரான ஜிம்மியும் டியனியும் தெரிவிக்கின்றனர்.