எட்டாவது பாராளுமன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று மூன்றாம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இன்றைய தினம் கல்வி திணைக்களம் மற்றும் பொலிஸ் திணைக்களம் ஆகியவற்றின் அதிகாரிகள் தபால் மூல வாக்களிப்பில் ஈடுபடலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மீண்டும் ஏனைய அரசாங்க ஊழியர்களுக்காக எதிர்வரும் 5 மற்றும் 6 ஆம் திகதிகளிலும் தபால் மூல வாக்களிப்பு நடைபெறவுள்ளது.
பாராளுமன்றத் தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்கு 566,823 பேர் தகுதி பெற்றுள்ளனர். நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்காக 628,925 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் தபால் மூலம் வாக்களிப்பதற்கு 566,823 தகுதி பெற்றுள்ளனர்.
எதிர்வரும் 17 ஆம் திகதி நடைபெறவுள்ள எட்டாவது பாராளுமன்றத்தேர்தலில் 225 பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக்குழுக்கள் சார்பாக 6151 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர்.
எட்டாவது பாராளுமன்றத் தேர்தலில் நாடு முழுவதும் மொத்தமாக ஒரு கோடியே 50 இலட்சத்து 44490 பேர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர்.
அத்துடன் நாடு முழுவதும் 12021 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படவுள்ளதுடன் தேர்தலானது 2014 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பின் பிரகாரம் நடைபெறவுள்ளது.
தேர்தலில் மாவட்டங்களின் ரீதியில் 196 பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளதுடன் 29 பேர் கட்சிகளுக்கு கிடைக்கின்ற வாக்குகளின் அடிப்படையில் தேசிய பட்டியல் தேசிய பட்டியல் மூலம் தெரிவு செய்யப்படவுள்ளனர். அந்தவகையில் 225 பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர். நாட்டில் 22 தேர்தல் மாவட்டங்கள் உள்ளன.