அனுஹாசன், நாசர், அமீத், டேவிட் ஆகியோர் நடித்துள்ள படம் ‘வல்லதேசம்’. இப்படத்தை என்.டி.நந்தா டைரக்ட் செய்துள்ளார். இமானுவேல், ரவீந்திரன் தயாரித்து உள்ளனர். எல்.வி.முத்துக்குமார சாமி, ஆர்.கே.சுந்தர் இசையமைத்து உள்ளனர். இந்த படத்தின் பாடல் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. நடிகர் கமல்ஹாசன் இவ்விழாவில் பங்கேற்று பாடல் சி.டி.யை வெளியிட்டார். விழாவில் அவர் பேசியதாவது:-
புதிய முயற்சிகளை பாராட்ட வேண்டும். வரவேற்க வேண்டும். அந்த நோக்கத்தில் தான் இந்த விழாவில், நான் கலந்துகொண்டேன். ஒரு பெண்மணியை மையமாக வைத்து இந்த படத்தை எடுத்துள்ளனர். இது சிறந்த முயற்சி. இப்போதெல்லாம் பெண்களை மையமாக வைத்து எடுக்கும் படங்கள் குறைந்து விட்டன. எனது வாத்தியார் (டைரக்டர் கே.பாலச்சந்தர்) பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்கள் நிறைய எடுத்தார். அவரை போல், படங்கள் எடுக்கும் இயக்குனர்கள் குறைவாக உள்ளனர்.
வீட்டில் பெண்கள் ராஜ்ஜியம் நடக்கிறது என்று சொல்கிறோம். ஆனால் சினிமாவில் அப்படி இல்லை. இந்த படத்தை பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதையம்சத்தில் துணிந்து எடுத்து உள்ளனர். இதுபோல் படங்கள் வரவேண்டும். டிரைலரை பார்க்கும் போது, உயர்ந்த தொழில்நுட்பம் தெரிந்தது. ஹாலிவுட் படமோ என்று நினைக்க வைத்தது. ஆனால் அப்படிப்பட்ட படாடோபம் இல்லை. குறைந்த ஆட்களை வைத்து இந்த படத்தை எடுத்து உள்ளோம் என்று படத்தின் டைரக்டர் என்னிடம் சொன்னார்.
எதிர்காலத்தில் இப்படித்தான் நடக்க போகிறது. 4 ஆயிரம் பேரை வைத்து படம் எடுத்து, 200 பேர் மட்டுமே பார்க்கின்ற நிலை இருப்பதை தவிர்த்து, 200 பேரை வைத்து படம் எடுத்து, கோடிக்கணக்கானோர் படத்தை பார்க்கின்ற நிலையை ஏற்படுத்த வேண்டும். எதிர்காலத்தில் அப்படித்தான் நடக்க போகிறது. இதன்மூலம் வேலைவாய்ப்புகள் பெருகும். சிறு சிறு குழுக்கள் இந்த பணிகளில் ஈடுபடுவார்கள். அது சினிமா தொழிலுக்கு நல்லது. கட்டுப்பாட்டோடு செயல்பட்டு, படத்தை எடுத்துள்ளனர்.
இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.