நீர்கொழும்பில் வைத்து போதைப் பொருளுடன் இளைஞர் ஒருவரை கைது செய்துள்ளதாக நீர்கொழும்பு பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தைச் சேர்ந்த விச போதைப் பொருள் பிரிவு பொலிஸார் தெரிவித்தனர்.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,கொச்சிக்கடை, ஏத்காலை பிரதேசத்தைச் சேர்ந்த தேவராஜா ஆசிக் (23 வயது) என்பவரே கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபராவார். சந்தேக நபரிடமிருந்து 13 கிராமும் 123 மில்லிகிராம் ஹெரோயின் பேதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட போதைப் பொருளின் பெறுமதி ஆறரை இலட்சம் ரூபாவாகும்.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றை அடுத்து சந்தேக நபர் பஸ் ஒன்றிலிருந்து இறங்கும் போது கைது செய்யப்பட்டுள்ளார். இவர் பாண் வியாபாரி போன்று நடித்து போதைப் பொருளை நீர்கொழும்பின் பல்வேறு பிரதேசங்களிலும் விநியோகித்து வந்துள்ளார் என்று விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது.
நீர்கொழும்பு பிராந்திய விச போதைப் பொருள் பிரிவின் பொறுப்பதிகாரி உபபொலிஸ் பரிசோதகர் ஆனந்த ஹேரத், சாஜன் குணசேகர பொலிஸ் கான்ஸ்டபிள்களான பிரியந்த மற்றும் அபேவிக்ரம ஆகியோரைக் கொண்ட குழுவினர் சந்தேக நபரை போதைப் பொருளுடன் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபரை நீதிமன்றில் ஆஜர் செய்யவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.