மாகாண சபைத் தேர்தல்கள் – முஸ்லிம் காங்கிரஸ் தனித்து போட்டி!!

489

SLMCஇலங்கையின் வடக்கு உட்பட மூன்று மாகாண சபைகளுக்கு நடைபெறவுள்ளத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது.இதை அக்கட்சியின் பொதுச் செயலர் ஹஸன் அலி உறுதிப்படுத்தியுள்ளார்.

கடந்த மூன்று வாரங்களாக இது குறித்த விவாதங்கள் நடைபெற்றன என்றும் அதையடுத்து இடம்பெற்ற கட்சியின் உயர்மட்டக் கூட்டத்திலேயே தனித்து போட்டியிடுவது எனும் முடிவு எட்டப்பட்டது எனவும் அவர் தெரிவித்தார்.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

ஆளும் கூட்டணியின் ஒரு அங்கமாக போட்டியிடுவது சாத்தியப்படாது என்று தமது உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியதை அடுத்தே, கட்சி இம்முடிவுக்கு வரவேண்டிய நிலை ஏற்பட்டது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

வட மாகாணத்திலுள்ள முஸ்லிம்களின் பிரச்சினைகள் முற்றாக தீர்ந்தபாடில்லை எனும் சூழலில் ஆளும் கூட்டணியுடன் சேர்ந்து போட்டியிடுவது தங்களது நலன்களை பாதிக்கும் என்று உயர்மட்டக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டதாகவும் அதை கட்சி கவனத்தில் எடுத்தது என்றும் அவர் தெரிவித்தார்.



மத்திய அரசில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியில் ஒரு அங்கமாக தமது கட்சி இருந்தாலும் தாங்கள் பாரபட்சமாக நடத்தப்படுவதாக கட்சி உறுப்பினர்கள் தெரிவித்த காரணத்தாலேயே தனித்து போட்டியிடும் சூழலுக்கு தள்ளப்பட்டதாகவும் ஹஸன் அலி கூறுகிறார்.

எனினும் ஆளும் கூட்டணியிலுள்ள இதர முஸ்லிம் கட்சிகள் தனியாக ஒரு அணி அமைத்து அதன் அடிப்படையில் தேர்தலை சந்திக்க விரும்பினால் அது குறித்து ஆக்கபூர்வமாக விவாதிக்க ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தயாரகவுள்ளது என்றும் அவர் கூறினார்.

தேர்தலுக்கு பிறகே யாரை ஆதரிப்பது என்கிற முடிவு எடுக்கப்படும் எனவும் ஹஸன் அலி தெரிவித்தார்.

-BBC தமிழ்-