மாங்குளம் பழைய முறிகண்டி கிழவன்குளம் பிரதேசத்தில் பயணிகள் பேருந்து ஒன்று இன்று (02.06.2015) செவ்வாய்க்கிழமை அதிகாலை விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், 19 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து இன்று அதிகாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக மாங்குளம் பொலிஸார் தெரிவித்தனர். இவ் விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 50 வயதான ஜெகநாதன் உதயஜோதி மற்றும் 29 வயதான தோமஸ் சாள்ஸ் நெரஞ்சன் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.
விபத்தில் காயமடைந்த 18 பேர் கிளிநொச்சி வைத்தியசாலையிலும் ஒருவர் யாழ். போதனா வைத்தியசாலையிலும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த அதிசொகுசு பேருந்து, வீதியோரமாக நிறுத்தப்பட்டிருந்த டிப்பருடன் மோதியதில் இவ் விபத்து ஏற்பட்டுள்ளது. சாரதி நித்திரை கொண்டதன் காரணமாக விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.
இவ் விபத்தில் பேரூந்து சாரதியின் கால் ஒன்று துண்டாகியுள்ளதாகவும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவிக்கின்றார். இந்த விபத்தில் உயிரிழந்தோர் மற்றும் காயமடைந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அச்சம் தெரிவிக்கப்படுகின்றது.
-வவுனியா நெற் செய்திகளுக்காக மாங்குளத்திலிருந்து பாஸ்கரன் கதீசன்-