மாயாண்டி குடும்பத்தார், கோரிப்பாளையம், முத்துக்குமுத்தாக உள்ளிட்ட பல படங்களை இயக்கிய , பிரபல சினிமா இயக்குனர் ராசு மதுரவன் இன்று காலமானார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி சென்னை மருத்துவமனையில் வைத்து உயிரிழந்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான ராசு மதுரவன், மறைந்த மணிவண்ணனிடம் பணியாற்றியவர். பூமகள் ஊர்வலம் என்ற படத்தில் இயக்குனராக அறிமுகமானார். குடும்பம், கிராமத்து உறவுகளை அருமையாகச் சித்தரித்த இவரின் மாயாண்டி குடும்பத்தார் படம் இவரை பிரபலப்படுத்தியது.
அதனைத் தொடர்ந்து மதுரையையும், திண்டுக்கல் மாவட்டத்தையும் பின்னணியாகக் கொண்ட திரைப்படங்களையே ராசு மதுரவன் இயக்கினார். கோரிப்பாளையம், முத்துக்கு முத்தாக, பாண்டி ஒலிபெருக்கி நிலையம் உள்ளிட்டவை இவரது இயக்கத்தில் உருவான வேறு சில வெற்றிப் படங்கள்.
சமீபத்தில், இவருக்கு நாக்கு மற்றும் தொண்டை பகுதியில் புற்றுநோய் பரவியிருப்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர். அதன் தொடர்ச்சியாக, சென்னை மடிப்பாக்கத்தில் உள்ள காமாட்சி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் கடந்த 15 நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் சிகிச்சைப் பலனின்றி இன்று காலை 11 மணியளவில் ராசுமதுரவன் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.