தென்மேற்கு பசிபிக் கடற்பகுதியில் அமைந்துள்ள பப்புவா நியூ குனியாவில் இன்று காலை அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை4.35 மணிக்கு நியூ அயர்லாந்து தீவில் இருந்து 110 கிலோ மீட்டர் தூரத்தில் 7.2 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.
தரைமட்டத்தில் இருந்து 379 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்ட இந்த நிலநடுக்கத்தால் நியூ அயர்ல்ந்து மற்றும் தரோன் பகுதிகள் கடுமையாக குலுங்கின.
இதனையடுத்து, சுமார் 2 மணி நேரத்திற்கு பிறகு நியூ பிரிட்டன் பகுதியில் உள்ள கண்ட்ரியன் நகரை இரண்டாவது நிலநடுக்கம் தாக்கியது. ரிக்டர் அளவில்6.8 என பதிவாகிய இந்த நிலநடுக்கம் தரை மட்டத்தில் இருந்து 62 கிலோ மீட்டர் ஆழத்தில் உருவானது என்று அமெரிக்க வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கங்கள் நகரின் ஒதுக்குப்புறமான பகுதிகளில் ஏற்பட்டதால் அதிகமான பொருட்சேதமோ, உயிர் சேதமோ ஏற்படவில்லை. மேலும்,சுனாமி எச்சரிக்கையும் விடப்படவில்லை.
நிலநடுக்கங்கள் அடிக்கடி ஏற்படும் ‘நெருப்பு வளையம்’ பகுதிக்குள் அடங்கியுள்ள நாடுகளில் ஒன்று பப்புவா நியூ குனியா என்பது குறிப்பிடத்தக்கது.