நேபாளத்தில் 3,300 ஆண்டுகள் பழமையான கோவிலின் சிதிலங்களை தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டெடுத்துள்ளனர்.புத்தர் பிறந்த லும்பினி பகுதி இப்போது நேபாளத்தில் உள்ளது. அப்பகுதியில் அமைந்துள்ள கோவில்கள் அனைத்தும் மன்னர் அசோகர் காலத்தைச் சேர்ந்தவையாகவே இதுவரை கருதப்பட்டு வந்துள்ளன. அவர் கி.மு. 3ஆவது நூற்றாண்டில் லும்பினியில் ஒரு தூணையும்,கோவிலையும் கட்டினார். இப்பகுதியில் புத்த மததத்தைப் பரப்புவதற்காக அவர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டார்.
இந்நிலையில், லும்பினி பகுதியில் சமீபத்தில் நேபாள மற்றும் சர்வதேச தொல்லியல் நிபுணர்கள் சமீபத்தில் நடத்திய அகழாய்வின் மூலம், அசோகர் காலத்துக்கு முன்பே அங்கு கோவில் இருந்தது தெரிய வந்துள்ளது. அங்கு 3,300 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த கிராமமும் கண்டறியப்பட்டுள்ளது. அந்தக் கிராமத்தில் இருந்த கோவிலின் சிதிலங்களை தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டெடுத்துள்ளனர். இது குறித்து நேபாள சுற்றுலா மற்றும் கலாசாரத்துறை செயலாளர் சுஷீல் கிமிரே, காத்மாண்டில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,இப்பகுதியை உலகளாவிய மதிப்பு மற்றும் பாரம்பரியத்தைக் காப்பாற்ற நேபாள அரசு நடவடிக்கை எடுக்கும் என்றார்.
லும்பினியில் புத்தர் பிறந்த பகுதிக்கு சில நூறு மீட்டர் தூரத்தில் கி.மு.1,300ஆம் ஆண்டில் இந்த கிராமம் இருந்துள்ளதற்கான அடையாளங்கள் கிடைத்துள்ளன. இப்பகுதியில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் குடியேற்றங்கள் நடந்துள்ளன. இது குறித்து பிரிட்டனின் துர்ஹாம் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ராபின் கோனிங்ஹாம் கூறுகையில், தெற்காசியாவில் முதன் முறையாக, அசோகர் காலத்துக்கு முந்தைய, செங்கற்களால் கட்டப்பட்ட கோவில் இருந்திருப்பது அகழாய்வு மூலம் தெரிய வந்துள்ளது என்றார்.
லும்பினி வளர்ச்சி அறக்கட்டளையின் துணைத் தலைவர் ஆசார்ய கர்மா சாங்கோ ஷேர்பா கூறுகையில், தொன்மையான கோவில், கிராமம் ஆகிய இரண்டும் கண்டறியப்பட்டுள்ளது பெரிய நடவடிக்கையாகும். இவை, புத்தரின் வாழ்க்கை மற்றும் லும்பினியின் முக்கியத்துவம் ஆகியவற்றை நாம் நன்கு புரிந்து கொள்ள உதவும் என்றார்.லும்பினி கடந்த1997ஆம் ஆண்டில் இருந்து ஐ.நா. அமைப்பான யுனெஸ்கோவின் பாரம்பரிய நினைவுச் சின்னங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.