IPL சூதாட்டம் விவகாரத்தில் BCCI எனப்படும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு நிறுவனத்தின் தலைவர் சீனிவாசன் பதவி விலக நெருக்கடி அதிகரித்து வருகிறது. அவர் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி BCCI செயலர் ஜக்தாலே, பொருளாளர் அஜய் ஷிர்கே ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.
IPL சூதாட்ட விவகாரத்தில் சீனிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பன் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர் பதவி விலக வேண்டும் என்ற நெருக்கடி கொடுக்கப்பட்டு வருகிறது.
BCCI பொருளாளர் அஜய் ஷிர்கே மிக மோசமான முறையில் சீனிவாசனை விமர்சித்து ராஜினாமா செய்ய வலியுறுத்தினார். இந்த நிலையில் BCCI. பொருளாளர் அஜய் ஷிர்கேயும், செயலாளர் சஞ்சய் ஜக்தாலேவும் தங்கள் பதவிகளை நேற்று ராஜினாமா செய்தனர். கிரிக்கெட்டில் சமீபத்திய சம்பவங்கள் தன்னை மிகவும் காயப்படுத்தியதால் பதவியை ராஜினாமா செய்ததாக ஜக்தாலே கூறியுள்ளார்.
மேலும், சூதாட்டம் தொடர்பாக குருநாத் மெய்யப்பன், இந்தியா சிமெண்ட்ஸ் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் உரிமையாளர்களிடம் விசாரணை நடத்துவதற்காக அமைக்கப்பட்ட 3 நபர் குழுவில் பணியாற்ற மாட்டேன் என்றும் ஜக்தாலே கூறியுள்ளார். இதே கருத்தை அஜய் ஷிர்கேவும் தெரிவித்திருக்கிறார்.