இலங்கையில் 13 ஆவது சட்டத்திருத்தம் நீர்த்துப் போக இந்தியா அனுமதிக்காது..!

652

இலங்கையின் அரசியல் சாசனத்தின் 13ஆவது சட்டத் திருத்தம் நீர்த்துப் போவதற்கு இந்தியா அனுமதிக்காது என்று பிரதமர் அலுவலகத் துணை அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.

இந்திய இலங்கை உடன்பாட்டின் கீழ் மாகாண சபைகளை அமைக்கவும் அவற்றுக்கு அதிகாரங்களை பகிர்ந்து அளிக்கவும் ஏற்பட்ட அந்த உடன்பாட்டையும், சட்டத் திருத்தத்தையும் இலங்கை அரசு ஒருதலைபட்சமாக திருத்த முடியாது என்று பிபிசிக்கு வழங்கிய சிறப்புப் பேட்டியில் அவர் தெரிவித்தார்.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டு,இலங்கையிலுள்ள அனைத்து மக்களும் சம உரிமையுடன் வாழ்வதையே இந்தியா விரும்புகிறது என்றும் கூறும் அவர் இது இலங்கை அரச தரப்பினரிடம் பல முறை கூறப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

ராஜீவ் காந்தி மற்றும் ஜெயவர்தன ஆகியோரிடையே ஏற்பட்ட ஒப்பந்தமும் அதன் மூலம் ஏற்படுத்தப்பட்ட இலங்கை அரசியல் சாசனத்தின் 13 ஆவது சட்டத் திருத்தமும் நீர்த்துப் போக நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகக் கூறப்படுவது குறித்து இந்தியா அதிருப்தி அடைந்துள்ளது எனவும் அவர் கூறுகிறார்.



இலங்கை அரசு ஒரு நாடாளுமன்றத் தேர்வுக் குழுவை அமைத்து அதன் மூலம் இந்தச் சட்டத் திருத்தம் குறித்து விவாதிக்கவுள்ளது என்பதே, அந்தச் சட்டத் திருத்தத்தை நீர்த்துப் போகச் செய்யும் ஒரு நடவடிக்கையாகவே இந்தியாவால் பார்க்கப்படுகிறது என்றும் கூறுகிறார் அமைச்சர் நாராயணசாமி.

சில மாதங்களுக்கு முன்னர் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்தியாவுக்கு விஜயம் செய்தபோது கூட, இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், இலங்கையில் அதிகாரப் பகிர்வை கொண்டுவரும் 13ஆவது சட்டத் திருத்ததை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார் எனவும் அமைச்சர் நாராயணசாமி தமிழோசையிடம் சுட்டிக்காட்டினார்.