அமெரிக்காவில் உரிய சான்றுகள் இல்லாமல்,சட்ட விரோதமாக பலர் குடியேறியுள்ளனர். இதே போல் 43 வயதான ஆன்டோனியோ லோபெஸ் சஜ் அமெரிக்காவில் குடியேறி லாஸ் ஏஞ்சல்சில் வாழ்ந்து வந்தார்.
கடந்த 2010-ம் ஆண்டு பாரில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் ‘பவுன்சர்கள்‘இவரை கொடூரமாக தாக்கினர். அப்போது ஒரு பவுன்சர் அவரை கீழே தள்ளி,தலையை மாறி மாறி தரையில் மோதினான். இந்த அசுர தாக்குதலில் அவரின் 25சதவீத மண்டையோடு நொறுங்கியது.
இந்த அளவுக்கு கொலை வெறி தாக்குதல் நடந்தும், உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை. ஆனால் நீண்ட கால தீவிர மருத்துவ சிகிச்சை பிறகு மறு பிறவி எடுத்த போதும், அவர் தனது பேச்சு திறனை இழந்து விட்டார். இந்த தாக்குதல் அவரின் நரம்பு மண்டலத்தில் நிரந்தர பாதிப்பை ஏற்படுத்தி விட்டது. இதனால் அவர் 24மணிநேர மருத்துவ கண்காணிப்பில் இருக்க வேண்டியுள்ளது.
இதை அடுத்து தனக்கு நேர்ந்த கொடுமைக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று கூறி,பவுன்சர்களை பணியில் அமர்த்தும் பாதுகாப்பு சேவை நிறுவனத்தின் மீது ஆன்டோனியோ வழக்கு தொடுத்தார். இந்த வழக்கு லாஸ் ஏஞ்சல்சில் உள்ள கோர்ட்டில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிவடைந்த நிலையில் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
தாக்குதலுக்கு உள்ளான ஆன்டோனியோவுக்கு 58மில்லியன் டாலர் (சுமார் ரூ. 5 கோடியே80 லட்சம்) வழங்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதனை எதிர்த்து பாதுகாப்பு நிறுவனம் மேல்முறையீடு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த தாக்குதலை நடத்திய பவுன்சர் தற்போது தலைமறைவாக உள்ளார். அவர் எந்த வித முறையான பயிற்சியும் பெற்றவரில்லை என்பது குறிப்பிடத்தக்கது.