அந்தமான் தீவில் தடை செய்யப்பட்ட வடக்கு சென்டினல் பகுதியில் அத்துமீறியதாக அமெரிக்க இளைஞர் ஒருவர் கைதாகியுள்ள நிலையில், இன்னொரு இளைஞரும் அத்துமீறி நுழைந்து சென்டினல் மக்களால் கொல்லப்பட்ட அதிர்ச்சி சம்பவம் வெளியாகியுள்ளது.
அமெரிக்க யூடியூபரான 24 வயது Mykhailo Viktorovych Polyakov என்பவர் தடை செய்யப்பட்ட வடக்கு சென்டினல் தீவுக்குள் அத்துமீறியதாக கூறி இந்திய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் மூன்று முதல் 5 ஆண்டுகள் வரை தற்போது சிறை தண்டனையை எதிர்கொள்ளவிருக்கிறார்.
வெளியாட்களிடம் கொடூரமாகவும் வன்முறையாகவும் நடந்து கொள்வதில் பெயர் பெற்ற சென்டினல் பூர்வகுடி மக்கள் வெளியுலக தொடர்பு ஏதுமின்றி வசித்து வருவதால் இந்திய அதிகாரிகள் உட்பட யாரும் தீவுக்குச் செல்வதில்லை.
தற்போது கைது செய்யப்பட்டுள்ள பாலிகோவுக்கு முன்பு, சென்டினல் தீவுக்குள் நுழைந்ததாக அறியப்பட்ட கடைசி நபர் ஒரு அமெரிக்க கிறிஸ்தவ மத போதகர் என்றே கூறப்படுகிறது.
கடந்த 2018ல் இச்சம்பவம் நடந்துள்ளது. ஜான் ஆலன் சாவ் என்ற 27 வயது நபர் தீவுக்கு அருகே நெருங்கியதும் சென்டினல் மக்களால் கொல்லப்பட்டுள்ளார். அவர்கள் வில் மற்றும் அம்புகளைப் பயன்படுத்தியே ஆலன் சாவ்வை கொன்றுள்ளனர்.
சென்டினல் பூர்வக்குடி மக்கள் தங்கள் தீவை மிகவும் பாதுகாத்து வருகின்றனர், வெளி உலகத்துடன் எந்த தொடர்பும் இல்லாமல், வெளியாட்களால் தங்கள் தீவுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்றே நம்பியுள்ளனர்.
பூர்வகுடி குழுக்களின் உரிமைகளுக்கான ஆர்வலரான டெனிஸ் கில்ஸ் தெரிவிக்கையில், சாவ் சிறிது காலமாக வடக்கு சென்டினல் தீவுக்கு செல்ல வேண்டும் என திட்டமிட்டு வந்துள்ளதாகக் கூறினார்.
அவர் உள்ளூர் மீனவர்களுக்கு லஞ்சம் கொடுத்து, அவர்களின் படகில் சென்டினல் தீவுக்கு புறப்பட்டுள்ளார்.
மீனவர்கள் அவரை ஒரு சிறிய படகில் தீவுக்கு அருகில் அழைத்துச் சென்றனர். எஞ்சியுள்ள தூரத்தை கடக்க சாவ் ஒரு கயாக்கைப் பயன்படுத்தியுள்ளார் என்றும், ஒருவழியாக தீவில் தரையிறங்கினார் என்றும் கூறப்படுகிறது.
சாவ் தீவுக்குள் நுழைந்ததும் பூர்வகுடி மக்களில் ஒருவர் சாவ் மீது அம்பால் தாக்கியதாக, அவருக்கு உதவிய மீனவர்கள் கண்டதாக டெனிஸ் கில்ஸ் பதிவு செய்துள்ளார்.
பின்னர் சாவ் உடலை அந்த மக்கள் தீவுக்குள் இழுத்துச் சென்றதாகவும், அவர்கள் சாவ் உடலை தீவுக்குள் புதைத்திருக்கலாம் என்றும் கூறுகின்றனர். 2006ல் இதுபோன்று இந்திய மீனவர்கள் இருவர் சென்டினல் தீவுக்கு அருகே தங்கள் படகை நிறுத்திவிட்டு தூங்கியுள்ளனர்.
அவர்களும் பூர்வகுடி மக்களால் தாக்குதலுக்கு இலக்கானதுடன், அந்த மீனவர்களின் சடலங்களை மீட்க சென்ற ஹெலிகொப்டர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறுகின்றனர்.
மிக சமீபத்தில் அமெரிக்க யூடியூபரான பாலிகோவ் வடக்கு சென்டினல் தீவுக்கு சென்று அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.
சுமார் ஒருமணி நேரம் அந்த தீவில் அவர் தங்கியுள்ளதும், ஆனால் சென்டினல் மக்களை இவரால் சந்திக்க முடியவில்லை என்றும் கூறப்படுகிறது. தற்போது இந்திய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, தண்டனையை எதிர்நோக்கியுள்ளார்.