எதிர்வரும் மே மாதம் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வவுனியா மாவட்டத்தில் 103 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 1231 வேட்பாளர்கள் தமது வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளதாக மாவட்ட அரச அதிபரும் தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலருமான பி.எ.சரத்சந்திர தெரிவித்தார்.
இன்று மாலை வேட்புமனுக்கள் ஏற்கும் பணிகள் நிறைவடைந்த பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்..
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் கடந்த 17 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு இன்று மதியம் 12 மணியவளவில் நிறைவுக்கு வந்திருந்தது.
அந்தவகையில் வவுனியா மாவட்டத்தில் உள்ள ஐந்து உள்ளூராட்சி மன்றங்களில் போட்டியிடவுள்ள கட்சிகள் மற்றும் சுயாதீனக் குழுக்கள் மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள தேர்தல் அலுவலகத்தில் வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.
வவுனியா மாநகரசபை
இதுவரை நகரசபையாக இருந்து தரமுயர்த்தப்பட்ட வவுனியா மாநகரசபைக்கு முதலாவது தேர்தலாக இது அமைந்துள்ளது. இம்முறை மாநகரசபையில் மொத்தமாக 20 உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்படவுள்ளனர்.
அதற்காக 10 அரசியல் கட்சிகளும் 2 சுயேட்சைக் குழுக்களும் வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்தன. அவற்றில் மக்கள் போராட்ட முன்னணியின் வேட்பு மனு முழுமையாக நிராகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஐக்கிய தேசியக்கட்சியில் வேட்பாளர் ஒருவர் நிராகரிக்கப்பட்டுள்ளார். அதன்படி 11 தரப்புக்களின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது
வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை
வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபைக்கு 26 உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்படவுள்ளனர். அதற்காக 12 அரசியல் கட்சிகளும் 4 சுயேட்சைக் குழுக்களும் வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்தது.
அவற்றில் ஜனநாயக தேசியக் கூட்டணி, ஐக்கியதேசிய கட்சி மற்றும் ஒரு சுயேட்சைக் குழுவின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதுடன் 13 தரப்புக்களின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
வெண்கல செட்டிகுளம் பிரதேச சபை
வெண்கல செட்டிகுளம் பிரதேசசபைக்கு 18 உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்படவுள்னர். அதற்காக 10 அரசியல் கட்சிகளும் 2 சுயேட்சைக் குழுக்களும் வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்தநிலையில் விண்ணப்பித்த 12 தரப்புக்களின் வேட்புமனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
வவுனியா வடக்கு பிரதேச சபை
வவுனியா வடக்கு பிரதேச சபையில் 23 உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்படவுள்ளனர். அதற்காக
09 அரசியல் கட்சிகளும் 02 சுயேட்சைக் குழுக்களும் வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்தது.
அவற்றில், இரண்டு சுயேட்சைக் குழுக்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. 9 தரப்புக்களின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
வவுனியா சிங்கள பிரதேச சபை
வவுனியா தெற்கு சிங்கள பிரதேச சபையில் 16 உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்படவுள்ளனர். அதற்காக 07அரசியல் கட்சிகளும் 2 சுயேட்சைக் குழுக்களும் வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்த நிலையில் அவை அனைத்தும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
அந்தவகையில் வவுனியா மாவட்டத்தில் உள்ள ஐந்து உள்ளூராட்சி சபைகளில் 103 உறுப்பினர்களை தெரிவுசெய்வதற்காக 1231 வேட்பாளர்கள் களத்தில் குதித்துள்ளனர்.
இதேவேளை உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடுவதற்காக 71 தரப்புக்கள் கட்டுப்பணத்தினை செலுத்தியிருந்ததன. அவற்றில் 11 தரப்புக்கள் வேட்புமனுக்களை கையளித்திருக்கவில்லை.
இத்தேர்தலில் வவுனியா மாவட்டத்தில் 129293 வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு தகுதிபெற்றுள்ளனர். என்றார்.