நடு வீதியில் கணவனும் மனைவியும் பலியான சோகம்!!

355

தேனி மாவட்டம் கம்பம் மந்தையம்மன் கோவில் தெருவில் வசித்து வந்தவர் நல்லதம்பி (37). இவர் சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வந்தார். இவரது மனைவி ரம்யா (30). இவர்களுக்கு திருமணமாகி 11 ஆண்டுகள் ஆகிறது.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

இந்த தம்பதிக்கு குழந்தை இல்லை. இந்த நிலையில் நேற்று முன்தினம் தேனி அருகே உள்ள வீரபாண்டி கவுமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவில் அவர்களது உறவினர்கள் தீச்சட்டி எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.

இதில் கலந்து கொள்ள நேற்று முன்தினம் இரவு நல்லதம்பியும், அவரது மனைவியும் கம்பத்தில் இருந்து கவுமாரியம்மன் கோவிலுக்கு ஆட்டோவில் சென்றனர். அங்கு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, சாமி தரிசனம் செய்தனர்.



பின்னர் நேற்று அதிகாலையில் நல்லதம்பியும், அவரது மனைவியும் ஆட்டோவில் கம்பம் நோக்கி வந்து கொண்டிருந்தனர். ஆட்டோவை நல்லதம்பி ஓட்டினார்.

நேற்று காலை 6 மணியளவில் உத்தமபாளையம் அடுத்துள்ள க.புதுப்பட்டி தனியார் பள்ளி அருகே வந்தபோது கம்பத்தில் இருந்து மதுரை நோக்கி சென்ற அரசு பேருந்தும், ஆட்டோவும் நேருக்கு நேர் மோதின. இதில் ஆட்டோ அப்பளம் போல் நொறுங்கியது.

இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்த நல்லதம்பி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மனைவி ரம்யா படுகாயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். பேருந்தில் இருந்த பயணிகள் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உத்தமபாளையம் போலீசார், ரம்யாவை மீட்டு சிகிச்சைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

நல்லதம்பியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.பின்னர் மேல்சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு ரம்யாவை அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அரசு பேருந்து ஓட்டுநர் முருகனை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.