வெப்பநிலை தொடர்பில் வடக்கு – கிழக்கு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

678

வடக்கு – கிழக்கு உட்பட நாட்டின் பல பகுதிகளில் தற்போது காணப்படும் அதிகரித்த வெப்பநிலை இன்னும் அதிகரிக்கும் என யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் புவியியற்துறை விரிவுரையாளரும் வானிலையாளருமான நாகமுத்து பிரதீபராஜா (Piratheeparajah Nagamuthu) எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

இந்த மாதத்தின் இறுதி நாட்களிலும் (28,29,30) அடுத்த மாதத்தின் ஆரம்ப நாட்களிலும் தற்போது உள்ளதை விட வெப்பநிலை உயர்வாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்ப அலைச் சுட்டெண்ணின் (Heatwave Index) ஆபத்தான வகைப்பாட்டுக்குள் நாம் இருப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகமாக காணப்படும்.



இந்நிலையில், எதிர்வரும் 30ஆம் திகதிக்கு பின்னர் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் அதிகூடிய வெப்பநிலை 40 பாகை செல்சியஸ்க்கு மேலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும். இந்துக்களின் பஞ்சாங்கத்தின்படி காண்டாவனம் அல்லது அக்கினி நாள் என்பது எதிர்வரும் 04ஆம் திகதி (04.05.2024) முதல் 28ஆம் (28.05.2024) திகதி வரை நிலவும் என குறிப்பிடுகின்றது.

எனினும், கடந்த சில நாட்களாக இரவுப் பொழுது வளிமண்டல சாரீரப்பதனின் அளவு உயர்வாக உள்ளது. இது எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் எமது உடல் அசௌகரியமான நிலைமையை உணரும் வாய்ப்புண்டு. தற்போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் ஆவியாக்க அளவு உயர்வாக உள்ளதுடன் இது மேலும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. எனவே எமது நீர்ப் பயன்பாட்டினை வினைத்திறனாக மேற்கொள்வது சிறந்தது.

எதிர்வரும் 27,28,29 மற்றும் 30ஆம் திகதிகளில் வடக்கு மாகாணத்தின் சில இடங்களில் பிற்பகலுக்கு பின்னர் மிதமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. எனினும், இம்மழை அதிகரித்த வெப்பமான வானிலையை தணிக்க போதுமானதல்ல.

எனவே, இக்காலப்பகுதியில் பாடசாலைகளில் மாணவர்களின் உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுச் செயற்பாடுகளை தவிர்ப்பதுடன் நோயாளர்கள், வயதானவர்கள், விசேட தேவையுடையவர்கள் பகல் பொழுது பிரயாணங்களை தவிர்ப்பது சிறந்தது எனவும் குறிப்பிட்டுள்ளார்.