வவுனியா வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலய விவகாரம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்கள் உணவு தவிர்ப்பு போராட்டம்

538

உணவு தவிர்ப்பு போராட்டம்…

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

வவுனியா வடக்கு வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தில் கைது செய்யப்பட்ட ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேரையும் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நேற்றையதினம் (12.03.2024) வவுனியா நீதிமன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனையடுத்து தமக்கு நீதிகோரி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஜவர் உணவு தவிர்ப்பில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த 8 ஆம் திகதி சிவராத்திரி தினத்தன்று வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தில் சிவராத்திரி பூஜை வழிபாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது ஆலயத்திற்குள் நுழைந்த பொலிசார் மற்றும் விசேட அதிரடிப் படையினர் வழிபாட்டில் ஈடுபட்ட ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேரை கைது செய்தனர்.



அவர்களை கடந்த 9 ஆம் திகதி சனிக்கிழமை வவுனியா நீதிமன்றில் முற்படுத்திய நிலையில் விசாரணைகள் நிறைவுபெறாத காரணத்தால் 12.03.2024ம் திகதி வரை அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். இந்நிலையில் நேற்று (12.03) மீண்டும் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. நேற்று காலை 9 மணி முதல் மூன்று தடவைகள் குறித்த வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வந்த நிலையில் தொல்பொருள் திணைக்களத்தினர் அங்குள்ள தொல் பொருட் சின்னங்களை சேதப்படுத்தியதாக மன்றின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தனர். இதனையடுத்து குறித்த 8 பேரையும் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

வவுனியா சிறைச்சாலையில் விளக்கமறியலில் உள்ள இவர்களை இன்றையதினம் (13.03.2024) காலை பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மற்றும் விளக்கமறியலில் உள்ளவர்களின் உறவினர்கள் பார்வையிட சென்றிருந்தனர். இதன் போதே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள எட்டு நபர்களின் ஜவர் நேற்று (12.03) காலை தொடக்கம் உணவு தவிர்ப்பில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

திலகநாதன் கிந்துஜன் , சுப்பிரமணியம் தவபாலசிங்கம் , மதிமுகராசா , துரைராசா தமிழச்செல்வன் , விநாயகமூர்த்தி ஆகிய ஐந்துபேரும் நேற்றைதினம் காலையிலிருந்து உணவின்றி பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.