உத்திரப்பிரதேசத்தில்..
ஒரு வயதுக் குழந்தையின் தாயை கழுத்தறுத்துக் கொன்ற தந்தை பின்னர் ரயில் முன்பாக பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். இத்துடன் இரவெல்லாம் தாயின் சடலத்துடன் வீறிட்டு அழுதபடி கிடந்த குழந்தை குறித்தான அவலம் குருகிராமில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உத்திரப்பிரதேசம்மாநிலம் காசியாபாத் பகுதியில் 30 வயது மதிக்கத்தக்க நபர் ரயில் முன்பாக பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். நேற்று நேரிட்ட இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் மேற்கொண்ட விசாரணையில், முன்னதாக அந்த நபர் தனது மனைவியை கொன்றுவிட்டு தற்கொலை செய்திருப்பது தெரிய வந்தது.
இதனையடுத்து அந்த நபரின் வீட்டை அடைந்த போலீஸார், கழுத்து அறுபட்டு சடலமாக கிடந்த பெண்ணையும், அதன் அருகே அழுதபடி இருந்த ஒரு வயது குழந்தையையும் மீட்டனர்.
ஆக்ராவை சேர்ந்தவர் கவுரவ் சர்மா. ஆறு மாதம் முன்பாக மனைவி லட்சுமி ராவத் மற்றும் ஆண் குழந்தையுடன் குருகிராமில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு வந்தனர்.
இதற்கு அப்பால் இந்த தம்பதியர் குறித்து அக்கம்பக்கம் வசிப்போர் அதிகம் தெரிந்திருக்கவில்லை. புத்தாண்டு கொண்டாட்டத்தில் நகரம் ஆழ்ந்திருந்தபோது, கவுரவ் சர்மா வீட்டில் பயங்கரம் அரங்கேறி இருக்கிறது.
மனைவி லட்சுமி ராவத் தலையில் செங்கல்லால் தாக்கப்பட்டும், கூரிய ஆயுதத்தால் கழுத்து அறுக்கப்பட்டும் கொல்லப்பட்டுள்ளார். ரத்த வெள்ளத்தில் கிடக்கும் தாயின் சடலத்தின் அருகே அவரது ஒரு வயது மகன் இரவெல்லாம் அழுதபடி இருந்துள்ளான்.
அவனது தலையிலும் செங்கல்லால் தாக்கிய சிறு காயம் தென்பட்டுள்ளது. மனைவியை கொன்ற கவுரவ் சர்மா, மகனைக் கொல்லும் முயற்சியில் பின்னர் அதனை கைவிட்டதாக போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
மனைவியை கொன்றதும், ஒரு வயது குழந்தையையும் அங்கேயே தவிக்கவிட்டு நள்ளிரவில் வீட்டைவிட்டு வெளியேறிய கவுரவ் சர்மா, கவுசாம்பி மெட்ரோ ரயில் நிலையம் அருகே பதுங்கி இருந்துள்ளார். காலையில் பயணிகள் நடமாட்டம் அதிகரித்ததும் அங்கிருந்து வெளிப்பட்டவர் முதலாவது பிளாட்பாரத்துக்கு விரைந்துள்ளார்.
வைஷாலி நோக்கி விரையும் ரயில் அருகில் வந்ததும், தண்டவாளத்தில் குதித்து தற்கொலை செய்திருக்கிறார். இவை அனைத்தும் மெட்ரோ ரயில் நிலைய சிசிடிவி கேமராக்களில் பதிவாகி உள்ளன. கவுரவ் சர்மா, லட்சுமி ராவத் தம்பதியின் உடலை கைப்பற்றி இருக்கும் போலீஸார், கொலை – தற்கொலை சம்பவங்களின் பின்னணி குறித்து விசாரித்து வருகின்றனர்.