இலங்கை பெண் ஒருவரை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட தமிழகத்தை சேர்ந்த இருவரின் மரண தண்டனையை குவைத் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
இந்தியா, நாகை மாவட்டம், முத்துபேட்டையை சேர்ந்தவர் 30 வயதான சுரேஷ் மற்றும் கும்பகோணத்தை சேர்ந்த 32 வயதான காளிதாஸ் ஆகிய இருவருக்குமான மரண தண்டணையே ரத்து செய்யப்பட்டுள்ளது.
இவர்கள் இருவரும் கடந்த 2008ம் ஆண்டிலிருந்து குவைத்தில் வேலை செய்து வருகின்றனர்.
கடந்த 2008இல் இலங்கையை சேர்ந்த பாத்திமா என்ற பெண் கொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை வழக்கில் சுரேஷ், காளிதாஸ், இலங்கையை சேர்ந்த நித்யா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் நித்யாவுக்கு ஆயுள் தண்டனையும் சுரேஷ், காளிதாசுக்கு மரண தண்டனையும் அறிவிக்கப்பட்டது.
கடந்த ஏப்ரல் 18ஆம் திகதி இவர்களுக்கு தண்டனை நிறைவேற்றப்பட இருந்தது. மரண தண்டனையிலிருந்து இவர்களை மீட்கும் படி இருவரது குடும்பத்தினரும், குவைத்தில் உள்ள இந்திய தூதரகத்தை கேட்டிருந்தனர்.
இந்நிலையில் இருவரது மரண தண்டனை ஜூன் 16ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டது.
தூதரக அதிகாரிகளின் முயற்சியினால் பாத்திமா குடும்பத்துடன், தூதரக அதிகாரிகளும், குவைத் அதிகாரிகளும் பேசினர்.
உரிய இழப்பீட்டை அளிக்க ஒப்புக்கொள்ளப்பட்டதால், சுரேஷ் மற்றும் காளிதாசின் மரண தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் பாத்திமா குடும்பத்தினருக்கு, கணிசமான இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதால், சுரேஷ் மற்றும் காளிதாசின் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டு குறைந்த பட்ச தண்டனை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.