தாம்பரத்தில்..
தாம்பரம் முடிச்சூர் பகுதியில் டாரஸ் லாரி மோதியதில், 11ம் வகுப்பு மாணவன் பலியான சம்பவம் உறவினர்கள் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை, தாம்பரம், முடிச்சூர், விஷ்ணு நகர் பகுதியை சேர்ந்தவர் நாராயணன். இவரின் மனைவி பொன்னி. இவர்கள் கட்டிட வேலை செய்து வருகின்றனர்.
இந்த தம்பதிக்கு, கல்லூரி படிக்கும் கீர்த்தனா என்ற மகளும், 16 வயதில் மகனும் இருந்தார். மகன் தனியார் பள்ளியில், 11ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று காலை, வழக்கம் போல், சைக்கிளில் பள்ளிக்கு சென்றார்.
முடிச்சூர், மதுரவாயல் சாலையில் சென்று கொண்டிருந்தபோது அங்கு வந்த டாரஸ் லாரி, சைக்கிளில் மோதியதில், மாணவன் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவ இடத்துக்கு ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு மாணவின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர், மாணவனின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் கிடைத்து, சிட்லபாக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் லாரி டிரைவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.