10ம் வகுப்புத் தேர்வில்..
திரிபுராவைச் சேர்ந்த தாய் ஒருவர் 10ம் வகுப்புத் தேர்விலும் அவரது மகள்கள் 12ம் வகுப்புத் தேர்விலும் தேர்ச்சி பெற்ற சம்பவம் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
திரிபுராவை சேர்ந்தவர் ஷீலா ராணி (53). இவருக்கு இளம் வயதிலேயே திருமணம் நடைபெற்றதால் இவரின் கல்வி பாதியிலேயே தடைப் பட்டது. பின்னர் முழுநேர குடும்பத் தலைவியாக இருந்து வீட்டைக் கவனித்து வந்தார்.
இதையடுத்து சில வருடங்களுக்கு முன்பு இவரது கணவரும் உயிரிழந்துவிட்டார். இதனால் தங்களது இரண்டு பெண் குழந்தைகளையும் தனியாக வளர்த்துப் படிக்கவைத்துள்ளார்.
இந்நிலையில் 12ம் வகுப்பு படிக்கும் அவர்கள் தங்களது தாயின் கல்வி படிப்பை மீண்டும் தொடரும் படி வலியுறுத்தியுள்ளனர். இதையடுத்து ஷீலா ராணி மகளின் விருப்பத்திற்காகவும், தனது கனவுக்காகவும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத முடிவு செய்துள்ளார்.
இதையடுத்து பிள்ளைகள் தங்கள் தேர்வுடன் சேர்த்து தாய்க்கு 10ம் வகுப்புத் தேர்வு எழுதவும் தாயர்படித்தி வந்துள்ளனர். பின்னர் தங்கள் பிள்ளைகள் உதவியுடன் ஷீலாவும் படித்து 10ம் வகுப்புத் தேர்வு எழுதியுள்ளார். அதேபோல் அவரின் பெண் பிள்ளைகளும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதியுள்ளனர்.
இந்நிலையில் நேற்று பொதுத் தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் 10ம் வகுப்பில் தாயும், 12ம் வகுப்பில் 2 மகள்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதனை அறிந்த அப்பகுதி மக்கள் ஷீலாவுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
பின்னர் இது குறித்து பேசிய ஷீலாவின் மகள்கள், “நாங்கள் இருவரும் சேர்ந்து தாயைத் தேர்வு எழுத ஊக்குவித்தோம். தற்போது அவரும் 10ம் வகுப்புத் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். அவரது மேற்படிப்பிற்கும் உதவி செய்வோம்” என மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.