இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்குச் செல்வோரின் புகலிடக் கோரிக்கைகளின் உண்மைத்தன்மை குறித்து தனக்கு உடன்பாடில்லையென அவுஸ்திரேலிய வலையமைப்பில் உள்ள நியூஸ்லைன் இணையத்தளத்திற்குத் தெரிவித்துள்ள அமைச்சர் பீரிஸ் அவர்கள் இலங்கையில் ஆபத்து எதனையும் எதிர்நோக்கவில்லையென்பதில் அவுஸ்திரேலியா நம்பிக்கை கொண்டிருந்ததாலேயே அவர்கள் அவுஸ்திரேலியாவினால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவுஸ்திரேலியா மட்டும் தனியாக இவ்வாறு திருப்பி அனுப்பவில்லையெனவும் குறிப்பிட்டார்.
அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் புகலிட கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்ட நிலையில் இலங்கைக்குத் திரும்பி வருவோரின் பாதுகாப்புக்கு தன்னால் உத்தரவாதம் வழங்க முடியுமென வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கடந்த 2009 ஆம் ஆண்டில் உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்ததை அடுத்து இலங்கையர்கள் பலர் பிரித்தானியா மற்றும் அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் தொடர்ந்தும் புகலிடம் கோரி வந்துள்ளனர்.
கடந்த வருடம் குறிப்பிடத்தக்க அளவில் இலங்கை புகலிடக்கோரிக்கையாளர்கள் படகுகள் மூலம் அவுஸ்திரேலியா கடற்பரப்பை வந்தடைந்திருந்தனர். ஆயினும் நேர்முகப்பரீட்சையொன்றின் பின்னர் 1200க்கு மேற்பட்ட புகலிடக் கோரிக்கை விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படாத நிலையில் அவர்கள் அனைவரும் அவுஸ்திரேலிய குடிவரவு அதிகாரிகளால் திருப்பி அனுப்பப்பட்டனர்.
இலங்கையில் தாங்கள் துன்புறுத்தல்களுக்கு உட்பட்டு வருவதாகக்கூறும் இத்தகைய விண்ணப்பதாரர்களுள் கணிசமானோர் தமிழர்களாவர். ஆயினும் குறித்த உள்நாட்டு யுத்தம் முடிவடைந்துள்ளதை அடுத்து நாடு ஸ்திர நிலையை அடைந்துள்ளதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அமைச்சர் பீரிஸ் கருத்து வெளியிடுகையில், இலங்கையில் பூரண அமைதி நிலவி வருவதாகவும் எதிர்வரும் நவம்பரில் கொழும்பில் நடைபெறவுள்ள பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாடானது இலங்கை எட்டியுள்ள சாதனைகளைக் காண்பிக்கும் வாய்ப்பொன்றை நாட்டிற்கு வழங்கவுள்ளதாகவும் எதனையும் நேரில் கண்டு தெளிவதே அதி சிறந்ததெனவும் அந்த வகையில் இலங்கைக்கு வருகை தரவுள்ள அனைத்து பொதுநலவாய நாடுகளினதும் பிரதி நிதிகள் அபிவிருத்தி சாதனைகடள நேரில் கண்ணாரக்கண்டு தெளியத்தான் போகின்றதெனவும் மேலும் தெரிவித்தார்.