கிழக்கு ஆப்பிரிக்க நாடான மொசாம்பிக்கின் தலைநகரான மபுடோவிலிருந்து அங்கோலாவின் தலைநகர் லுவாண்டாவிற்கு நேற்று ஒரு பயணிகள் விமானம் 28 பயணிகளுடனும், 6 ஊழியர்களுடனும் புறப்பட்டது. நமீபியாவிற்கு வடக்கே பறந்து கொண்டிருந்தபோது அந்த விமானத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. டிஎம் 470 என்ற எண்ணுள்ள அந்த விமானம் அதன்பின் குறிப்பிட்ட நேரப்படி அங்கோலாவிலும் தரையிறங்கவில்லை என்று தெரிய வந்துள்ளது.
இந்த விமானம் குறித்த ஆரம்பத் தகவல்கள் போட்ஸ்வானா மற்றும் அங்கோலாவின் எல்லைக்கு அருகில் இருக்கும் வடக்கு நமீபியாவின் ருண்டு விமானநிலையத்தில் தரையிறங்கியிருக்ககூடும் என்று தெரிவித்தன. எனினும்,எல்ஏஎம் விமான நிறுவனங்கள், விமானத்துறை மற்றும் விமான நிலைய அதிகாரிகள் இது குறித்த தகவலை உறுதிப்படுத்திக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக அரசுத் தகவல்கள் கூறியுள்ளன.
வான்வழித்தடத்திலிருந்து மறைந்துபோன விமானத்துடன் கடைசியாகத் தொடர்பு கொண்ட நேரம் குறித்தோ, அதில் பயணம் செய்து கொண்டிருந்தவர்களின் விபரங்களையோ விமான நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் நோர்பெடோ முபுகோபாவால் உறுதிப்படுத்த முடியவில்லை.