அமெரிக்கா, பாகிஸ்தானில் மறைந்துள்ள தீவிரவாதிகளை அழிப்பதற்கு ஆளில்லா போர் விமானங்களைப் பயன்படுத்தி வருகின்றது. பொதுமக்களும் சில நேரங்களில் இத்தகைய தாக்குதல்களுக்குப் பலியாவதால் அவற்றை நிறுத்த வேண்டும் என்ற எதிர்ப்பு பாகிஸ்தானில் வலுத்து வருகின்றது.
கடந்த 21-ம் திகதி ஹங்கு என்ற மக்கள் நெருக்கமுள்ள பகுதியில் நடைபெற்ற தாக்குதலில் ஆறு பேர் கொல்லப்பட்டதும், எட்டு பேர் காயமடைந்ததும் பொதுமக்களின் கோபத்தை அதிகப்படுத்தியது. இதனைத் தொடர்ந்து கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் ஆட்சியில் இருக்கும் டெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சியினர் உள்ளிருப்புப் போராட்டங்கள் மூலமாகவும், ஆப்கானிஸ்தான் வீரர்களுக்கு சரக்குகள் ஏற்றிச் செல்லும் நேட்டோ வாகனங்களைத் தடை செய்தும் தங்களின் எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர்.
எனினும், நேற்றும் அமெரிக்காவின் ஆளில்லா விமானங்கள் பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியில் இரண்டு ஏவுகணைகளை வீசியுள்ளன. தெற்கு வரிசிஸ்தான் பகுதியில் உள்ள மிரான்ஷா என்ற இடத்தில் இந்த ஏவுகணைகள் வீசப்பட்டுள்ளதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், இந்த விமானங்கள் அந்தப் பகுதியிலேயே தொடர்ந்து வட்டமிடுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவை ஏதேனும் வாகனத்தையோ அல்லது கட்டிடத்தையோ குறிவைத்திருக்ககூடும் என்று கூறப்படுகின்றது. இந்தத் தாக்குதலில் யாரேனும் கொல்லப்பட்டார்களா என்ற விபரம் இன்னும் வெளிவரவில்லை. டெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சியின் தகவல் தொடர்பாளரான ஷிரீன் மசாரி, பாகிஸ்தான் அரசு இந்தத் தாக்குதல்கள் குறித்து அமைதியாக இருப்பதற்குத் தனது ஆட்சேபணைகளை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்.