இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அர்ஜூனா ரணதுங்க மும்பையில் அளித்த பேட்டி வருமாறு:-
இந்திய அணியின் பேட்டிங் வரிசை பலமாக இருக்கிறது. ஆனால் அடுத்த உலக கோப்பையை வெல்லும் அளவுக்கு இந்திய அணியின் பந்து வீச்சு வலுவாக இருக்கிறதா? என்பது எனக்கு தெரியவில்லை. ரோகித் ஷர்மா நீண்ட காலத்திற்கு பிறகு டெஸ்ட் அணியில் அறிமுகம் ஆகி இருக்கிறார்.
நான் பார்த்த திறமையான பேட்ஸ்மேன்களில் ரோகித் ஷர்மாவும் ஒருவர். அவருக்கு ஏன் டெஸ்ட் அணியில் இவ்வளவு காலம் வாய்ப்பு கிடைக்காமல் இருந்தது என்று பல முறை ஆச்சரியமடைந்தது உண்டு. கோலியும் திறமையான வீரர்.
இவர்களுடன் இடக்கை பேட்ஸ்மேன் ஷிகர் தவானும் சேர்ந்து இருப்பதால் இந்தியாவின் பேட்டிங் வலுப்பெற்றுள்ளது. ஆனால் பந்து வீச்சில் தடுமாறிக் கொண்டிருக்கிறார்கள். இந்திய அணி உள்ளூரில் அசத்தி வருகிறது. உள்ளூரில் வெற்றி பெறுவது முக்கியமானது தான்.
ஆனால் வெளிநாடுகளுக்கு செல்லும் போது தான் உண்மையான பலம் தெரியும். அதிலும் சாதிக்க வேண்டியது அவசியம். கிரிக்கெட் என்பது பேட்ஸ்மேன்களின் விளையாட்டு என்று நிறைய பேர் சொல்கிறார்கள். ஆனால் நான் பேட்ஸ்மேன்களுக்கு 60 சதவீதமும், பந்து வீச்சாளர்களுக்கு 40 சதவீதமும் சாதகமாக இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன்.
ஆனால் இப்போது 90:10 என்ற அளவிலும், சில சமயம் 95:5 என்ற அளவிலும் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருப்பது போல் தெரிகிறது. இப்படியே போனால் பந்து வீச்சு திறமை பாழாகி விடும்.
இவ்வாறு ரணதுங்க கூறினார்.