முத்தையா முரளிதரன் வடக்கில் வாழும் தமிழ் மக்களுக்கு எவ்வித பிரச்சினையுமில்லை என வெளிநாட்டு அரசியல்வாதிகளுக்கு கூறியிருப்பது தமிழ் மக்களின் இதயங்களை புண்படுத்துகின்றதும் எமக்கு வேதனை அளிக்கின்றதுமான கூற்றாக இருக்கின்றது என முன்னாள் நீதித்துறை பிரதியமைச்சர் வீ. புத்திரசிகாமணி தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
முத்தையா முரளிதரனுக்கு எப்போதுமே தமிழ் உணர்வு இருந்தது இல்லை என்பது இலங்கை வாழ் தமிழர்களுக்கு நன்றாகத் தெரிந்த விடயமாகும்.
அரசாங்கம் உட்பட பல சிங்களத் தலைவர்கள் தமிழ் மக்களுடைய பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் எனக் கூறுகின்ற இந்நிலையில் இவர் பிரச்சினை இல்லையெனக் கூறுவது வேடிக்கையாக இருந்தாலும் எமது மக்களை இது எந்தளவிற்கு பாதித்திருக்கும் என்பதை தமிழ் உணர்வு இல்லாததால் அவரால் உணரமுடியாது.
அரசாங்கம் நல்லிணக்க ஆணைகுழுவின் சிபாரிசுகளை நடைமுறைபடுத்த முயற்சிக்கின்ற இவ்வேளையில், இவரது விளையாட்டுத்தனமும் அபத்தமாக சொல்லுகின்ற வார்த்தைகளும் எமக்காக வாதிடும் சிங்கள அரசியல்வாதிகளையும் அரசாங்கத்தையும்கூட நிந்திப்பதாக அமைந்துள்ளது.
எனவே, தமிழ் மக்களிடமும் எமக்காக பேசுகின்ற அரசியல்வாதிகளிடமும் அரசாங்கத்திடமும் மன்னிப்புக் கோரி இதுபோன்ற விளையாட்டுத்தனமான அறிக்கைகளையும் பேச்சுகளையும் சொல்வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
இவர் ஏதாவது பதவி பட்டங்களை எதிர்பார்பாரேயானால் அதற்கு வேறுவிதமாக செயற்பட வேண்டுமேயொழிய வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் எமது மக்களை துன்புறுத்தக் கூடாது என்றார்