சென்னை மெரினா கடற்கரை பகுதியில் நிறுவப்பட்டுள்ள நடிகர் சிவாஜி கணேசனின் சிலையால் சாலை விபத்துக்கள் நிகழ்கின்றன, எனவே அதனை அங்கிருந்து அகற்றிவிடலாம் என தமிழக அரசு கூறியிருக்கிறது.
அச்சிலையினால் பல்வேறு சிக்கல்கள் எழுகின்றன எனவே அது அகற்றப்படவேண்டும் எனக் கோரி நாகராஜ் என்பவர் தாக்கல் செய்துள்ள பொது நல மனுவிற்கு பதிலளிக்கும் வகையிலேயே சென்னை மாநகரப் போக்குவரத்து காவல்துறையினர் அவ்வாறு கூறியிருக்கின்றனர்.
கடந்த 2012ம் ஆண்டு அந்த இடத்தில் 12 விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன என்றும் நடப்பாண்டில் இதுவரை 8 விபத்துக்கள் நடந்துள்ளன என்றும் காவல்துறையினர் கூறியுள்ளனர்.
வாகனயோட்டிகள் காமராஜர் சாலையிலிருந்து ராதாகிருஷ்ணன் சாலைக்குத் திரும்பும்போதும், ராதாகிருஷ்ணன் சாலையில் இருந்து வலது புறம் கடற்கரை சாலைக்குத் திரும்பும்போதும், சிவாஜி சிலை போக்குவரத்து சிக்னலலை மறைக்கிறது எனவும் அரச தரப்பில் கூறப்படுகிறது.
எனவே, சிலையை மெரினா கடற்கரையில் வேறொரு இடத்திற்கு மாற்றிவிடலாம் எனவும் போக்குவரத்து நலன் கருதி இந்த நடவடிக்கையை எடுக்க வேண்டும் எனவும் அரசின் மனுவில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
சிவாஜியின் சிலை பல்வேறு முட்டுக்கட்டைகளுக்குப் பின் ஒருவழியாக கடற்கரை சாலையில் அன்றைய முதல்வர் கருணாநிதியால் 2006 ஆம் ஆண்டில் திறந்துவைக்கப்பட்டது.
கடந்த மாதம் பொது நல வழக்கு தொடுக்கப்பட்டவுடன் தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தின் சார்பில் சிலையை அகற்றக் கூடாது என வலியுறுத்தி மாநகர காவல்துறை ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டது. இந்நிலையிலேயே இன்று சாலை விபத்துக்களைக் காரணம் காட்டி சிலையை அங்கிருந்து மாற்றிவிடலாம் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
தலைமை நீதிபதி ஆர்.கே அகர்வால், மற்றும் நீதிபதி எம் சத்தியநாராயணா ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் அடுத்த கட்ட விசாரணையை டிசம்பர் 13ம் நாளுக்கு ஒத்திவைத்தது.