மட்டக்களப்பில் அமைந்துள்ள கடைகள் சிலவற்றினை நேற்றிரவு கொள்ளையர்கள் உடைத்து பல இலட்சங்கள் பெறுமதியான பொருட்களை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,
மட்டக்களப்பு திருமலை வீதியிலுள்ள கடைத்தொகுதியில் நேற்றையதினம் வியாபார நடவடிக்கைகள் முடிவடைந்த நிலையில் உரிமையாளர்கள் கடைகளை அடைத்துச் சென்றுள்ளனர். இன்று காலை வழமைபோன்று வியாபார நடவடிக்கைகளுக்காக கடைகளினை திறக்க முற்பட்டபோது கடைகள் உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்ட சம்பவம் தெரியவந்திருக்கிறது.
குறித்த கடைத்தொகுதியில் அமைந்துள்ள மூன்று கடைகள் இவ்வாறு கொள்ளையர்களால் உடைக்கப்பட்டு பொருட்கள் சூறையாடப்பட்டுள்ளன. கொள்ளையிடப்பட்ட பொருட்கள் பல இலட்சங்கள் பெறுமதியானவை என நம்பப்படுகிறது.
சம்பவம் தொடர்பாக கடை உரிமையாளர்கள் பொலிசாரிடம் முறையிட்டுள்ள நிலையில், மட்டக்களப்பு பொலிசார் வழக்குப் பதிவுசெய்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதேவேளை, சம்பவம் தொடர்பாக இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
(ரமணன்)