இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரனுக்கு எதிராக நேற்று வியாழக்கிழமை சாவகச்சேரி நகர சபையில் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த தீர்மானத்தை நகரசபை உறுப்பினர் பி ஸ்ரீதரன் முன்மொழிய மற்றும் ஒரு உறுப்பினர் கிஷோர் வழிமொழிந்தார். இதனையடுத்து குறித்த தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
முத்தையா முரளிதரன் வெளிநாடுகளில் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தபோது வடக்கில் மக்கள் பாரிய பாதிப்புக்கு உள்ளாகியிருந்தனர்.
இதன்போது பெருந்தொகையான ஆண்களும் பெண்களும் காணாமல்போயினர்.
இந்தநிலையில் முரளிதரன் பாதிக்கப்பட்ட இந்த மக்களின் மனங்களை புண்படுத்தியுள்ளார் என்று சாவகச்சேரி நகரசபையின் கண்டனத் தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே எதிர்காலத்தில் முரளிதரன் வடக்கில் கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபடும் போது எதிர்ப்பை வெளியிடுவதென்றும் சாவகச்சேரி நகரசபை தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை துணுக்காய் பிரதேச சபையிலும் முரளிதரனுக்கு எதிராக கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.