மனித உரிமை மீறல் குற்றவாளிகளை இலங்கை அரசு தண்டிக்க வேண்டும் என்றும், அந்த சதிகாரர்களைப் பிடித்து நீதியின் முன் நிறுத்த வேண்டும் என்றும் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் வலியுறுத்தி உள்ளார்.
சிங்கப்பூரில் தெற்காசியா புலம்பெயர்ந்தோர் மாநாடு நேற்று முன்தினம் தொடங்கியது. மூன்றாவது நாளான இன்று மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய இந்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்திடம், மாநாட்டில் கலந்துகொண்ட பிரதிநிதி ஒருவர், ‘‘சிறுபான்மை தமிழ்மக்கள் இன்னலுற்று வருகிற இலங்கையில் முதலீடுகள் செய்ய ஏன் அனுமதிக்க வேண்டும்?’’ என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்துப் பேசிய ப.சிதம்பரம், “தனது சொந்த நாட்டு மக்களுக்கும், உலகமெங்கும் உள்ள மக்களுக்கும் பதில் அளிக்க வேண்டிய கடமை இலங்கை அரசுக்கு உண்டு. இந்த விஷயத்தில், மனித உரிமை மீறல்கள் குறித்த குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை நடத்தி, அதற்கு காரணமானவர்களை இலங்கை தண்டிக்க வேண்டும்.
மனித உரிமை மீறல் பிரச்சினையைப் பொருத்தமட்டில் எந்த நாடு, எந்த மக்கள் என்ற எல்லைகள் கிடையாது.எனவே இதில் இலங்கை அரசுக்கு பொறுப்பு இருக்கிறது. மனித உரிமை மீறல்களுக்கு காரணமானவர்களை கண்டுபிடிக்க வேண்டும். அந்த சதிகாரர்களைப் பிடித்து நீதியின் முன் நிறுத்த வேண்டும்.
இப்படி கூறுவதால், இலங்கை பொருளாதார ரீதியில் வளர்ச்சி அடையக்கூடாது என்பது அர்த்தம் ஆகாது. இலங்கையில் முதலீட்டாளர்கள் முதலீடு செய்யக்கூடாது என்றும் அர்த்தம் கொள்ளக்கூடாது. யாரும் தர்ம காரியங்களுக்காக முதலீடு செய்வதில்லை. லாபம் அடைவதற்கான வாய்ப்பு உள்ளது என கருதித்தான் முதலீட்டாளர்கள் முதலீடு செய்வர்.
முதலீடுகள் தடுக்கப்பட வேண்டாம்:
இலங்கையில் உள்நாட்டுப்போர் முடிவுக்கு வந்தபோது நடந்த சம்பவங்களுக்கு பொறுப்பானவர்களை கண்டறிவதில் தற்போதைய தோல்விக்காக, அந்த நாட்டுக்கு முதலீடுகள் போவதை தடுக்க வேண்டும் என நான் கருதவில்லை.
இந்தியாவில் 8 சதவீத வளர்ச்சிக்கு நல்ல வாய்ப்புகள் உள்ளன. ஒப்பீடு செய்யத்தக்க அளவில் நல்ல லாபங்களும் வரும். எனவே முதலீடு செய்வதற்கு பாதுகாப்பான நாடாக இந்தியா விளங்குகிறது.மிகப் பெரிய மற்றும் மிகச்சிறிய அளவிலான பொருளாதார அடிப்படை அம்சங்கள், இந்தியாவை முதலீடுகளை ஈர்க்கத்தக்க, பாதுகாப்பான முதலீட்டுத்தளமாக திகழச்செய்கின்றன.
இந்தியப் பொருளாதாரம் ஸ்திரமாக இருக்கவும், முதலீட்டாளர்களிடையே பெரிய அளவில் நம்பிக்கையை ஏற்படுத்தவும் தேவையான பல நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது” என்றார்.