ஹாலந்தின் தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் உள்ள பூங்காக்களில் வெட்டியாக மது அருந்திக்கொண்டும், சிகரெட் பிடித்துக்கொண்டும், பெண்களைக் கேலி செய்துகொண்டு பொழுது போக்கும் கும்பல் ஒன்று அரசு நிர்வாகத்திற்குத் தலைவலியைத் தந்து கொண்டிருந்தது. இவர்கள் வேலை எதுவும் செய்யாமல் வெட்டியாகச் சண்டையிட்டுக் கொண்டும், சத்தம் போட்டுக்கொண்டும் இருந்தார்கள்.
அரசு மற்றும் தனியார் நன்கொடைகள் மூலம் அங்கு இயங்கிவந்த ரெயின்போ அறக்கட்டளை திட்டத்தின் தலைவரான ஜெர்ரி ஆல்டர்மேன் இவர்களைக் கையாள ஒரு அருமையான திட்டத்தைச் செயலாற்றியுள்ளார்.
இதன்படி இந்தக் குடிகாரர்கள் அனைவரும் 10 பேர் கொண்ட இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டனர். இவர்கள் ஒவ்வொரு குழுவினரும் வாரத்தில் மூன்று நாட்கள் பூங்காக்களைச் சுற்றியுள்ள தெருக்களை சுத்தம் செய்யும் வேலையில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
இதற்கு சம்பளமாக அவர்களுக்கு தினமும் 10 டாலர் பணமும், அரை பாக்கெட் சிகரெட்டும், ஐந்து பீர் கேன்களும் கொடுக்கப்படுகின்றன. மூன்று நாட்களுக்கு ஒரு குழு வீதம் அவர்கள் இந்தத் துப்புரவுப் பணியினை மேற்கொள்ளுகின்றனர்.
காலையில் இரண்டு பீர் கேன்களும், மதியம் இரண்டு கேன்களும் மாலை வேலை முடிந்து செல்லும்போது ஒரு கேனும் அவர்களுக்கு வழங்கப்படுகின்றது. அவர்கள் குடிக்கும் அளவும் ஜெர்ரியால் கண்காணிக்கப்படுகின்றது.
அவர் எங்காவது வெளியே சென்றால்கூட இவர்கள் தாங்கள் குடிக்கும் அளவுகளை சரியாக குறித்துத் தருகின்றார்கள் என்று அவர் கூறுகின்றார். இதன்மூலம் அவர்கள் மற்றவர்களுடன் எந்தப் பிரச்சினைக்கும் செல்லாமல் இருப்பதுமட்டுமின்றி துப்புரவுப் பணியும் ஒழுங்காக நடப்பதாக ஜெர்ரி தெரிவித்தார்.
சரியான நேரத்தில் உணவும், செய்யும் வேலைக்கு சம்பளமும் அவர்களுக்குத் தரப்படுகின்றது. சமூக விரோத நடத்தை கொண்ட மக்களை பயன்படுத்தும் இந்த நடைமுறை மற்ற நாடுகளில் அதிர்ச்சியை ஏற்படுத்தக்கூடும். ஆனால், ஹாலந்து நாட்டவர்களின் செயல்முறைக்குத் தக்க நடவடிக்கையாக இந்தத் திட்டம் வெற்றியைத் தேடித்தந்துள்ளது.