முரளியின் கருத்தை முன்னிறுத்தி யாரும் அரசியல் செய்வதில் பிரயோஜனம் இல்லை – பிரபா கணேசன்..!

433

prabaஅண்மையில் முத்தையா முரளிதரன் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்த கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இது எனக்கு ஆச்சரியத்தை கொடுக்கவில்லை. ஏனெனில் அவர் தமிழர் என்ற அடையாளத்தை எப்பொழுதும் வெளிப்படுத்தியதில்லை.

ஆகவே அவரது கருத்துகளை முன்னிறுத்தி யாரும் அரசியல் செய்வதில் பிரயோஜனம் இல்லை என ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பிரபா கணேசன் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளது.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

மேலும் அவர் தெரிவித்ததாவது,

முத்தையா முரளிதரன் புகழின் உச்சகட்டத்தில் இருந்த பொழுது தன்னை ஒரு தமிழன் என்று சொல்லியதும் இல்லை. பொது இடங்களில் தமிழில் உரையாற்றியதும் இல்லை. ஆகவே அவருக்கு தமிழ் மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளக் கூடிய மனிதாபிமான சிந்தனையும் இல்லை. அரசாங்கத்தை திருப்திபடுத்துவதற்கான கருத்துக்களையே வெளியிட்டுள்ளார்.



இலங்கையில் காணாமல் போனோர் சம்பந்தமாக நீண்ட பட்டியல் ஒன்று உள்ளது. காணாமல் போனோரின் உறவினர்களது மன வேதனைகளை வார்த்தைகளால் மதிப்பிட முடியாது. 2006-2007ம் ஆண்டுகளில் காணாமல் போனவர்களின் உறவினர்களை 2007ம் ஆண்டிலே தலைநகரத்திற்கு அழைத்து வந்து மாபெரும் ஆர்ப்பாட்டங்களையும் போராட்டங்களையும் முன்னின்று நடத்தியுள்ளேன்.

ஆனால் அப்போராட்டங்களுக்கு நான் தலைமை தாங்காவிட்டாலும் சம்பந்தப்பட்ட உறவினர்களின் வேதனைகளை பல மணித்தியாலங்கள் அவர்களுடன் பேசி பகிர்ந்து கொண்டுள்ளேன். முத்தையா முரளிதரனின் கருத்துக்கள் மூலமாக அவர்கள் மனது எவ்வளவு புண்பட்டிருக்கும் என்பதை நான் அறிவேன். இவ்வாறானவர்கள் சம்பந்தமாக முரளிதரன் கருத்து வெளியிட்டிருப்பது முத்தையா முரளிதரன் சார்ந்த இந்திய வம்சாவளியி தமிழன் என்ற அடிப்படையில் அவர்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கின்றேன்.

காலங்காலமாக 2006ம் ஆண்டு முதல் காணாமல் போனவர்களின் உறவினர்களை அரசாங்கம் உதாசீனம் செய்து வருகின்றது. ஏனையோர் இவர்களை பகடைக்காய்களாக பாவித்து வருகின்றனர். காணாமல் போனவர்களின் உறவினர்களை வரவழைத்து நாட்டில் பல பாகங்களில் பல போராட்டங்களை நடத்தி அரசியல் விளம்பரங்கள் தேடிக் கொண்டவர்கள் காணாமல் போனவர்களின் ஒருவரையாவது கண்டு பிடித்து கொடுத்ததில்லை.

அது மட்டுமின்றி தன் போராட்டம் முடிந்த மறு நாள் கலந்து கொண்ட உறவினர்கள் நலமுடன் வீடு போய் சேர்ந்தார்களா என்று தெரிந்து கொள்வதில் கூட அக்கறை செலுத்துவது இல்லை என்ற கசப்பான உண்மையை நேரடியாக பார்த்து தெரிந்து கொண்டவன் நான்.

ஆகவே காணமல் போனவர்களை வைத்து அரசியல் செய்தவர்களதும் அவர்களின் மனதை புண்படுத்தும் விதத்தில் பேசிய முத்தையா முரளிதரனின் செயல்பாடுகளும் ஒன்றேயாகும். இனியாவது இவர்களின் உணர்வுகளில் தன் தமது இலாபத்திற்காக எவரும் அரசியல் செய்யக் கூடாது.

காணாமல் போனவர்களை ஒரு போதும் இந்த அரசாங்கம் மீட்டுக் கொடுக்கப் போவதும் இல்லை என்ற வேதனையான பக்கத்தையும் நான் அறிவேன். வடகிழக்கு பிரதேசத்தைச் சார்ந்த கே.பி போன்றவர்கள் தமிழ் மக்களுக்கு எதிராக இதை விட மோசமான கருத்துக்களை வெளியிட்டுள்ளார்கள்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் முத்தையா முரளிதரன் மன்னிப்பு கேட்கா விட்டால் அவருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக தெரிவித்துள்ளார். அத்துடன் கே.பி போன்று தமிழ் மக்களுக்கு சேர்த்து எதிராக கருத்து தெரிவிப்பர்களுக்கும் எதிராக ஆர்ப்பாட்டத்தை மேற்கொள்ள வேண்டும்.