பொதுநலவாய மாநாட்டின் இறுதியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் கைச்சாத்திடப்பட்ட கொழும்பு பிரகடனத்தில், மனித உரிமைகள் விவகாரம் தொடர்பில் இலங்கைக்கெதிராக அழுத்தம் கொடுக்கக் கூடிய எந்தவொரு கருத்துக்களும் இடம்பெற்றிருக்கவில்லையென பிரதம கொரடாவும், அமைச்சருமான தினேஷ் குணவர்தன நேற்று தெரிவித்தார்.
இலங்கை வந்த பிரிட்டிஷ் பிரதமர் கமரூன் தனிப்பட்ட ரீதியாகவே இலங்கையின் மனித உரிமைகள் விவகாரம் குறித்து தனது கருத்துக்களை முன்வைத்துச் சென்றாரேயொழிய, அவரது கருத்துக்களுக்கும் கைச்சாத்திடப் பட்டுள்ள கொழும்பு பிரகடனத்துக்கும் எவ்வித தொடர்புமில்லையென்பதனையும் அமைச்சர் தினேஷ் குணவர்தன தெளிவாக வலியுறுத்தினார்.
ஜனாதிபதியவர்கள் கொழும்பு பிரகடனத்தில் கைச்சாத்திட்டதன் மூலம், பிரிட்டிஷ் பிரதமர் மனித உரிமைகள் விசாரணை மற்றும் சர்வதேச விசாரணை தொடர்பில் இலங்கைக்கெதிராக விடுத்த அழுத்தத்திற்கு, இலங்கை அரசாங்கம் இணங்கியிருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியினர் பொய்ப் பிரசாரங்களை முன்னெடுத்து வருவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இன்னுமொரு நாட்டிற்குள் வந்த பிரிட்டிஷ் பிரதமர் கமரூன் உள்ளிட்ட அவரது பிரதிநிதிகள் பிரிட்டிஷ் கலாசாரத்துக்கு முரணான வகையில் நடத்து கொண்டுள்ளார்கள் என்றால் அதற்குக் காரணம் வெளிநாடுகளில் வசிக்கும் புலம்பெயர் வாழ் தமிழர்களின் தவறான வழிகாட்டலேயென்பது இச்சந்தர்ப்பத்தின் மூலம் எமக்கு தெட்டத் தெளிவாகியுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
எது எவ்வாறாயினும் பிரிட்டிஷ் பிரதமர் கமரூனின் கருத்துக்களை நாம் கடுமையாக ஆட்சேபிக்கிறோம். அவர் இலங்கையில் தெரிவித்துச் சென்ற கருத்துக்கள் பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டிற்குரியதல்ல. பிரிட்டன் பிரதமர் கமரூன் தனது தனிப்பட்ட அபிப்பிராயமாகவே கருத்துக்களை முன்வைத்துச் சென்றுள்ளார்.
கொழும்பு பிரகடனத்தின் எந்தவொரு பகுதியிலும் கமரூன் மட்டுமின்றி இலங்கைக்கெதிராக அழுத்தம் கொடுக்கும் எந்தவொரு நாட்டின் அபிப்பிராயங்களும் அதில் பொதுநலவாயத்தின் அனைத்து நாடுகளுக்கும் பொதுவானதொரு பிரகடனமாகுமென்பதனை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.