மும்பை விமான நிலையத்தில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஆப்பிரிக்க நாட்டவரின் வயிற்றில் அவர் கடத்தி வந்திருந்த போதைப்பொருள் கேப்சியூல் வெடித்ததால் அவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படும் வழியிலேயே பலியானார்.
ஆப்பிரிக்காவின் தான்சானியா நாட்டைச் சேர்ந்த 2 வாலிபர்கள் விமானம் மூலம் மும்பை வந்தனர். அவர்கள் இருவரும் போதை மருந்து கடத்தி வருவதாக மும்பை குடியுரிமை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அதிகாரிகள் இருவரின் உடமைகளை சோதனையிட்டனர். எதுவும் சிக்கவில்லை.
பிறகு அவர்களிடம் மேற்கொள்ளபட்ட விசாரணையில், அவர்கள் தோள் பட்டை வலிக்கு சிகிச்சை பெற வந்தாக தெரிவித்தார்கள். ஆனால் அவர்களின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால், அவர்கள் வயிற்றில் போதை மருந்து கடத்தி வந்திருக்கலாம் என்று கருதி இருவரையும் அதிகாரிகள் மும்பை நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்று வயிற்றில் எக்ஸ்ரே எடுத்துப் பார்க்க அனுமதி பெற்றனர்.
அப்போது அவர்களில் ஒருவர் திடீர் என்று வயிறு வலிப்பதாக கூறி துடித்தான். இதையடுத்து அதிகாரிகள் உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைத்து மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர்.
ஆனால், வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் பலியானான். பலியானவரின் உடலை பரிசோதித்து பார்த்ததில், அவர் ‘கொகைன்’ என்ற போதை மருந்தை மாத்திரை கேப்சூலில் அடைத்து அதை வயிற்றில் விழுங்கி எடுத்து வந்தது தெரியவந்தது.
அவர்கள் வயிற்றில் இருந்த போதை மருந்து கேப்சியூல் வெடித்ததால் அதனை கடத்திவந்தவர் பலியாகினார். இதையடுத்து மற்றொரு வர் வயிற்றில் இருந்து 50 போதை மருந்து கேப்சியூல்களை மருத்துவரகள் உதவியுடன் வெளியே எடுத்தனர்.