சச்சினுக்கு பாரத ரத்னா விருது அறிவிப்பு..!

409

India v West Indies 2nd Test Day 3கிரிக்கெட்டில் பல்வேறு உலக சாதனைகளை ஏற்படுத்தி நாட்டிற்கு பெருமை தேடித்தந்தவர் சச்சின் டெண்டுல்கர். 24 ஆண்டுகாலம் இந்திய அணிக்காக விளையாடிய அவர் தனது 200-வது டெஸ்ட் போட்டி முடிந்ததும் இன்று ஓய்வு பெற்றார்.

இந்நிலையில், விளையாட்டில் சாதனை படைத்த சச்சின் டெண்டுல்கரை கவுரவிக்கும் வகையில் அவருக்கு நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்க பிரதமர் மன்மோகன்சிங் பரிந்துரை செய்து, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு கடிதம் அனுப்பியிருந்தார். இதனை பரிசீலனை செய்த ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, சச்சினுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படுவதாக இன்று அறிவித்தார். ஓய்வு பெற்ற நாளிலேயே சச்சினுக்கு இந்த விருது அறிவிப்பு வெளியானது குறிப்படத்தக்கது.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

இதேபோல் வேதியியல் விஞ்ஞானி சி.என்.ஆர். ராவுக்கும் பாரத ரத்னா விருது வழங்கப்படும் என்றும் ஜனாதிபதி மாளிகை அறிவித்துள்ளது. இதன்மூலம் பாரத ரத்னா விருதை பெறும் முதல் விளையாட்டு வீரர் என்ற பெருமையை சச்சின் பெற்றுள்ளார். மிக குறைந்த வயதில் பாரத ரத்னா விருதைப் பெற்றவர் என்ற பெருமையையும் சச்சின் பெற்றுள்ளார்.

கிரிக்கெட் உலகின் கதாநாயகனாகத் திகழ்ந்த சச்சின் இதுவரை 200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 51 சதம் 68 அரை சதங்களுடன் 15921 ரன்கள் அடித்துள்ளார். 463 ஒருநாள் பேட்டிகளில் 49 சதம், 96 அரை சதங்களுடன் 18426 ரன்கள் விளாசி விடைபெற்றுள்ளார். இவரது சாதனையைப் பாராட்டி பத்மவிபூஷன், ராஜீவ் காந்தி கேல் ரத்னா உள்ளிட்ட விருதுகள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளன.



மாநிலங்களவை உறுப்பினராகவும் பதவி வகித்து வருகிறார். சச்சினுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டதை அறிந்த கிரிக்கெட் ரசிகர்கள் இதனை உற்சாகமாகக் கொண்டாடினர். பாரத் ரத்னா விருது பெறும் வேதியியல் விஞ்ஞானி சி.என்.ஆர்.ராவ், கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்தவர். 79 வயதான ராவ், அறிவியல் தொடர்பாக 1500 ஆய்வுக் கட்டுரைகளும் 45 புத்தகங்களும் எழுதியுள்ளார். பத்மஸ்ரீ,பத்மவிபூஷன் போன்ற விருதுகளைப் பெற்றுள்ள ராவ், தற்போது பிரதமரின் அறிவியல் ஆலோசனைக் குழு தலைவராக உள்ளார்.