எதிர்வரும் மார்ச் மாதத்திற்கு முன்னதாக இலங்கையில் இடம்பெற்ற யுத்தக் குற்றச் செயல்கள், மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பக்கச்சார்பற்ற சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும் என பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கைக்கு எதிர்வரும் மார்ச் மாதம் வரையில் கால அவகாசம் வழங்குவதாகவும் அவ்வாறு சுயாதீன விசாரணை நடத்த தவறும் பட்சத்தில் சர்வதேச ரீதியான விசாரணைக்கு இலங்கை முகங்கொடுக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும் என அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
எதிர்வரும் மார்ச் மாதம் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கூட்டத் தொடரின்போது இலங்கை மீதான சர்வதேச விசாரணை குறித்து அழுத்தம் கொடுக்கப்படும் என டேவிட் கமரூன் தெரிவித்துள்ளார்.
நேற்று (15) வடக்கிற்கான விஜயத்தை முடித்துக் கொண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து பேசிய போதே பிரித்தானிய பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு நிலைமைகள் குறித்து அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமென பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டுபோர் நிறைவின் பின்னர் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் வரவேற்கப்பட வேண்டியது எனத் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக வடக்கு மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட்டமை மிகச் சாதகமான ஓர் முன்நகர்வு என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எவ்வாறெனினும் இடம்பெயர் மக்கள் பிரச்சினைகள், காணிப் பிரச்சினைகள், வடக்கு இராணுவ பிரசன்னம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
வட மாகாணசபைக்கு அதிகாரங்களை பகிர்வது தொடர்பிலும் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும் டேவிட் கமரூன் முன்வைத்த கருத்துக்கள் அனைத்தையும் ஜனாதிபதி ஏற்றுக்கொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை வடக்கில் செனல் 4 ஊடகவியலாளர்கள் இலங்கையின் போர்க் குற்றம் குறித்து எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த டேவிட் கமரூன் சுயாதீச விசாரணை இல்லையேல் சர்வதேச விசாரணை என்ற தீர்மானத்தில் உறுதி என திட்டவட்டமாக தெரிவித்தார்.