சிலாபம் – ஆரச்சிக்கட்டுவ மற்றும் ராஜகந்தலுவ பிரதேசத்தில் இரு பஸ்கள் கல்வீச்சுக்கு இலக்காகியுள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர்.
மோட்டார் வண்டியில் சென்ற இரு ஆண்கள் இந்த தாக்குதலை இன்று அதிகாலை 5.30 மணியளவில் மேற்கெண்டுள்ளனர்.
தாக்குதலுக்கு இலக்கான பஸ்ஸில் ஒன்று இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமானது.
ராஜகந்தலுவ பிரதேசத்தில் தாக்குதலுக்கு இலக்கான இந்த பஸ் வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்தது.
யாத்திரிகர்களை ஏற்றிக் கொண்டு சிலாபத்திலிருந்து அநுராதபுரம் நோக்கி பயணித்த மற்றுமொரு பஸ் ஆரச்சிக்கட்டுவ பிரதேசத்தில் வைத்து தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது.
தாக்கதலில் பஸ்ஸின் சாரதி சிறிய காயங்களுக்கு இலக்காகியுள்ளார்.
இதேவேளை நேற்று முன்தினம் வவுனியாவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பஸ் மீது இனந்தெரியாத நபர் கல்வீச்சுத் தாக்குதலை மேற்கொண்டுள்ளார்.
முச்சக்கர வண்டியில் வந்தவர்கள் தாக்குதல் நடத்திவிட்டுத் தப்பிச் சென்றதாக பஸ் ஊழியர்கள் பொலிஸ் முறைப்பாட்டில் கூறியுள்ளனர்.
அன்றைய தினம் (14) சிலாபம் – காக்கைப்பள்ளி மற்றும் மாதம்பை – இரட்டைக்குளம் பகுதிகளில் தனியார் பஸ்கள் மீதும் கல்வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
யாழ், மற்றும் வவுனியாவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பஸ்கள் மீதே இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை.