கடந்த சில மாதங்களாக எதிர்பார்த்தபடி சீன அரசு தனது ஒரு குழந்தைத் திட்டத்தைத் தளர்த்துவதாக நேற்று அறிவித்துள்ளது.
அது மட்டுமின்றி, அந்நாட்டில் மனித உரிமை முயற்சியை மேம்படுத்தும் விதமாக நடைபெற்று வரும் தொழிலாளர் முகாம்களும் ஒழிக்கப்படுவதாக அந்நாட்டின் அரசு செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இந்த வாரம் நடைபெற்ற கம்யுனிசத் தலைவர்களின் உயர்மட்டக் குழுக் கூட்டத்திற்குப் பிறகு இந்தக் கொள்கை மாற்றம் குறித்து அறிவிக்கப்பட்டது.
குடும்பத் திட்ட விதிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றத்தின் மூலம், பெற்றோரில் ஒருவர் ஒரு குழந்தையாக இருக்கும் பட்சத்தில் அவர்கள் இரண்டாவது குழந்தையைப் பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூன்றாவது குழு என்று அழைக்கப்பட்ட உயர்மட்டத் தலைவர்கள் பங்குபெற்ற இந்த வாரத்திய கலந்தாய்வில் எடுக்கப்பட்ட மிக முக்கியமான முடிவு இது என்று அரசு செய்தி நிறுவனம் அறிவித்துள்ளது.
தொழிலாளர் முகாம்களை ஒழிப்பதுவும் சீன அரசில் நடைபெற்றுள்ள மிகப் பெரிய மாற்றமாகக் கருதப்படுகின்றது. இந்த அமைப்பின்மூலம் ஆயிரக்கணக்கானோர் வேலை மூலம் மறுகல்வி என்ற பெயரில் விசாரணையின்றி சிறையில் அடைக்கப்பட்டது முடிவிற்கு வருகின்றது.
கடந்த 1950 ஆம் ஆண்டில் சோவியத் ரஷ்யாவை மாதிரியாகக் கொண்டு இந்த அமைப்பு மாவோ சே துங்கினால் ஏற்படுத்தப்பட்டது. கடந்த 2008 ஆம் ஆண்டில் இதுபோன்ற 350 முகாம்களில் 1,60,000 பேர் சிறை வைக்கப்பட்டுள்ளதாக நீதித்துறை அமைப்பு தெரிவித்திருந்தது.