பொதுநலவாய அரச தலைவர்கள் பங்குகொள்ளும் 23ஆவது உச்சிமாநாடு இன்று காலை 10.15 அளவில் கொழும்பு மாநகரில் கோலாகலமாக ஆரம்பமாகிறது.
கொழும்பு, மஹிந்த ராஜபக்ஷ தாமரைத் தடாகம் அரங்கில் அங்குரார்ப்பண நிகழ்வு நடைபெறுகிறது. இதனையிட்டு, கொழும்பு மாநகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. வீதிகள் அலங்கரிக்கப்பட்டுள்ளதோடு பொதுநலவாய அமைப்பில் அங்கம் வகிக்கும் 53 நாடுகளின் தேசியக் கொடிகளும் பறக்கவிடப்பட்டுள்ளன.
அங்குரார்ப்பண நிகழ்வுகள் சுமார் ஒன்றரை மணி நேரமே நடைபெற உள்ளதோடு இதன் போது, பொது நலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பிரிட்டிஷ் இளவரசர் சார்ள்ஸ் பொதுநலவாய அமைப்பின் தற்போதைய தலைவரும் அவுஸ்திரேலிய பிரதமருமான டொனி அயோட் ஆகியோர் உரை நிகழ்த்துவர்.
உச்சிமாநாட்டு முதல்நாள் அமர்வின் போது பொதுநலவாய அமைப்பின் தலைமைத்துவப் பொறுப்பு அவுஸ்திரேலிய பிரதமரினால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்படவுள்ளது. இதன்படி இரு வருடங்களுக்கு பொதுநலவாய அமைப்பின் தலைவராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பதவி வகிப்பார்.
பொதுநலவாய மாநாட்டின் ஆரம்ப நிகழ்வில் பங்கேற்கும் பிரிட்டிஷ் இளவரசர் சார்ள்ஸ் மற்றும் வெளிநாட்டுப் பிரதிநிதிகளுக்கு செங்கம்பள வரவேற்பு அளிக்கப்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இலங்கை கலாசார முறைப்படி அரச தலைவர்களுக்கு வரவேற்பு வழங்கப்பட உள்ளதோடு கலை கலாசார நிகழ்ச்சிகளும் இங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
ஆரம்ப நிகழ்வையொட்டி விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு சில வீதிகள் குறிப்பிட்ட சில மணி நேரங்கள் மூடப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. சமத்துவத்துடனான வளர்ச்சி, பரிபூரணமான அபிவிருத்தி என்ற தொனிப்பொருளில் இம்முறை உச்சி மாநாடு நடைபெற உள்ளதோடு உச்சி மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வைத் தொடர்ந்து காலை 11.15 தொடக்கம் 11.30 வரை உத்தியோகபூர்வமாக புகைப்படம் எடுக்கும் நிகழ்வு இடம்பெறவுள்ளது.
நெலும் பொக்குன மஹிந்த ராஜபக்ஷ திரையரங்கின் பிரதான நுழைவாயிலில் பிரிட்டிஷ் இளவரசர் சார்ள்ஸ் உடன் பொதுநலவாய அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளின் அரச தலைவர்கள் புகைப்படம் எடுக்கவுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து காலை 11.45 தொடக்கம் பிற்பகல் 2.15 வரை ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க ஞாபகார்த்த கண்காட்சி மண்டபத்தில் நிறைவேற்று அமர்வு இடம்பெறவுள்ளது.
அதனைத் தொடர்ந்து பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மாவினால் பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் வரவேற்பு வழங்கப்படவுள்ளது. இதனைத் தொடர்ந்து பிற்பகல் 2.30 தொடக்கம் 3.15 வரை அரச தலைவர்களுக்கும் இளைஞர் தலைவர்களுக்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.
அதேவேளை, பிரிட்டிஷ் இளவரசர் சார்ள்ஸ் பொதுநலவாய அரச தலைவர்களுக்கான விஷேட இராப்போசன விருந்துபசாரம் வழங்கவுள்ளார். இந்த நிகழ்வு சினமன் லேக்சைட் ஹோட்டலில் இடம்பெறவுள்ளது.
இன்று ஆரம்பமாகும் மாநாடு எதிர்வரும் 17 ஆம் திகதி வரை இடம்பெற உள்ளது. இரண்டாம் நாளான நாளையும் பொதுநலவாய தலைவர்கள் மாநாடு தொடர உள்ளதோடு அரச தலைவர்களுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பகல்போசன விருந்துபசாரம் வழங்க ஏற்பாடாகியுள்ளது.
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அரச தலைவர்கள் வடக்கு அடங்கலான நாட்டின் சில பிரதேசங்களுக்கு செல்ல உள்ளனர். மாநாட்டின் இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1.00 மஹிக்கு மாநாடு நிறைவடைகிறது.
அதனைத் தொடர்ந்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தெரிவு செய்யப்பட்ட அரச தலைவர்கள் மற்றும் பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா ஆகியோர் பங்குபற்றும் இறுதி ஊடகவியலாளர் மாநாடு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறும்.