மூதாட்டியை கொலை செய்து குளிர் சாதனப் பெட்டியில் வைத்த மளிகை கடைக்காரரை சாகும்வரை தூக்கிலிட வேண்டும் என நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.
மதுரை மாவட்டம், விளாத்திகுளம் பகுதியை சேர்ந்தவர் வீரபத்திரன். இவரது மகன் முத்துசெல்வன் (24).
இவர் 2009ம் ஆண்டு குடும்பத்துடன் சென்னையில் குடியேறினார். மதுரவாயல் அடுத்த நெற்குன்றம் சக்தி நகரில், முத்துசெல்வன் மளிகை கடை நடத்தியதுடன் தண்ணீர் போத்தல்களும் விற்பனை செய்தார். தீபாவளி சீட்டும் பிடித்தார்.சீட்டு கட்டியவர்களின் பணத்தை ஆடம்பர செலவு செய்ததால் சீட்டு கட்டியவர்களுக்கு பணம் கொடுக்க முடியாமல் முத்துசெல்வன் திணறினார்.
இதற்காக மளிகை கடைக்கு வரும் பெண்களிடம் கடன் வாங்க தொடங்கினார். 2011 மார்ச் மாதம் தண்ணீர் போத்தல் பரிமாறி விட்டு கடைக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது, அதே பகுதியில் வசிக்கும் பவானி என்ற பெண்ணிடம் நகையை பறித்த அவரை பொதுமக்கள் பிடித்து மதுரவாயல் பொலிசில் ஒப்படைத்தனர்.
இதனைத் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த பொலிசார் முத்துசெல்வனை சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் மூடப்பட்டிருந்த முத்துசெல்வனின் மளிகை கடையில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதுபற்றி மதுரவாயல் பொலிசாருக்கு தகவல் கொடுத்தனர்.
பொலிசார் விரைந்து வந்து கடையை உடைத்து சோதனையிட்டதில் அங்கு குளிர் சாதனப் பெட்டியில் ஒரு மூதாட்டியின் சடலம் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
விசாரணையில் அதே பகுதியில் உள்ள கோயில் பூசாரி கணபதி சங்கர் என்பவரின் தாய் ஜெயலட்சுமி (53) என தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து சிறையில் இருந்த முத்துசெல்வனை பொலிஸ் காவலில் எடுத்து விசாரித்தனர். அவர் அளித்த வாக்குமூலத்தில், கணபதி சங்கர் வேலை செய்யும் கோயிலில் பக்தர்கள் போடும் சில்லரைகளை அவரது தாய் ஜெயலட்சுமி தினமும் மளிகை கடையில் கொடுத்து பணமாக பெற்று செல்வார்.
மேலும் ஜெயலட்சுமி வீட்டில் தண்ணீர் சப்ளையும் நான் செய்தேன்.நகை பறிப்பு சம்பவத்தில் நான் கைதான ஒரு வாரத்துக்கு முன் என் கடைக்கு ஜெயலட்சுமி வந்தார்.
இரவு நேரத்தில் வெளியில் சில்லரையை எண்ண வேண்டாம். உள்ளே வந்து எண்ணுங்கள் என கூறினேன். ஜெயலட்சுமி உள்ளே வந்ததும் காய்கறி நறுக்கும் கத்தியால் அவரது கழுத்தை அறுத்து கொன்றேன்.
பின்னர், அவர் அணிந்திருந்த 5 சவரன் நகையை எடுத்து கொண்டு, சடலத்தை குளிர் சாதனப் பெட்டியில் வைத்தேன்.பின்னர் அந்த நகையை விற்று சீட்டு கட்டியவர்களுக்கு தரவேண்டிய பணத்தை கொடுத்தேன்.
இதற்கிடையில் செயின் பறிப்பு சம்பவத்தில் சிக்கி சிறைக்கு சென்றதால் கடையில் சடலம் இருப்பது பொலிசாருக்கு தெரியவந்துள்ளது என்று கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து முத்துசெல்வன் மீது கொலை வழக்குப்பதிவு செய்த பொலிசார் அவரை மீண்டும் சிறையில் அடைத்தனர். பின்னர் அவர் ஜாமீனில் வெளிவந்தார்.
இந்நிலையில் பூந்தமல்லி கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் 3ல் நடைபெற்று வந்த இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.
நீதிபதி ரவீந்திரபோஸ் அளித்த தீர்ப்பில், முத்துசெல்வன் திருடியது, கொலை செய்தது, கொலையை மறைத்தது என 3 குற்றங்கள் செய்துள்ளார். 23 சான்று ஆதாரங்களை பரிசீலித்ததில் அவர் மீதான குற்றம் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது.
எனவே அவரை சாகும் வரை தூக்கிலிட வேண்டும் என்று தீர்ப்பளித்து உத்தரவிட்டுள்ளார்.