இலங்கை அரசுக்கும் நாட்டுக்கும் அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் திட்டமிட்டு பொய்ப்பிரசாரங்களை சனல் 4 தொலைக்காட்சி மேற்கொண்டு வருவதாகவும் கூறி, ஆகவே கலம் மெக்ரே உட்பட அந்த ஊடகத்தின் செய்தியாளர்களை உடனடியாக நாட்டைவிட்டு வெளியேற்ற வேண்டும் எனக் கோரி வவுனியாவில் வியாழனன்று ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.
ஏ9 வீதியில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் ஆண்களும் பெண்களுமாக இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு, சனல் 4 ஊடகத்திற்கு எதிராகக் கோஷங்களை எழுப்பினர் வவுனியா மன்னார் வீதிச் சந்திக்கருகில் யாழ் வீதியில் ஆரம்பித்த இந்த ஆர்ப்பாட்டம் வவுனியா அரச செலயக வாயில்வரை சென்றது.
ஆர்ப்பாட்டக்காரர்களை ஏ9 வீதியில் முன்னேறிச் செல்லவிடாமல் பொலிசார் தடுத்து நிறுத்தினர். எனினும் ஆர்ப்பாட்டக்காரர்களும் முண்டியடித்து முன்னேற முயற்சித்தனர். எனினும் அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படவில்லை.
சுமார் ஒரு மணித்தியாலத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்காகப் பலர் வவுனியாவுக்கு வெளியில் இருந்து பஸ் வண்டிகளிலும், வேறு வாகனங்களிலும் கொண்டு வந்து இறக்கப்பட்டிருந்தனர்.