இங்கிலாந்தின் டார்சட் அருகேயுள்ள விம்போர்ன் நகரை சேர்ந்தவர் ஜாக் ஹேக் (93).
70 ஆண்டுகளாக இவருடன் இணைபிரியாமல் வாழ்ந்த மனைவி வெரோனிக்கா சமீபத்தில் காலமானார்.
அதன் பின்னர், உடல் நலம் பாதிக்கப்பட்டு தனிமையில் வாடிய ஜாக் ஹேக் முதுமையை விரட்டிவிட்டு இன்னும் கொஞ்ச காலம் பூமியில் வாழ விரும்பினார்.
ஏற்கனவே 3 முறை இருதய சத்திர சிகிச்சை செய்து கொண்ட இவருக்கு நான்காவதாக மேலும் ஒரு சத்திர சிகிச்சை செய்ய வேண்டியுள்ளது. அதற்கு ஆயிரம் பவுண்கள் வரை செலவாகும் என்று வைத்தியர்கள் தெரிவித்தனர்.
இதற்கான பணத்தை திரட்டவும், உலக மக்களின் கவனத்தை ஈர்க்கவும் முடிவெடுத்த அவர் 10 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து ‘ஸ்கை டைவிங்’ செய்யப் போவதாக அறிவித்தார்.
நடக்கவே இயலாத ஜாக் ஹேக்கை சிலர் கைதாங்கலாக விமானத்தில் ஏற்றி விட்டனர்.
விமானம் மேலே எழும்பியதும் தன்னிடம் இருந்த பெரிய பையை முதுகில் கட்டிக் கொண்டு குதிப்பதற்கு தயாரானார்.
‘இது எதற்கு தேவை இல்லாத பாரத்தையும் சுமந்துக் கொண்டு ஸ்கை டைவிங் செய்ய போகிறீர்கள் ?’ என்று விமானத்தில் இருந்தவர்கள் கேட்டபோது சோகமான ஒரு புன்னகையை மட்டுமே உதிர்த்த அவர் 10 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து கீழே குதித்து பத்திரமாக தரையிறங்கினார்.
இவரது சாகசத்தை கண்டு மெய்சிலிர்த்த பலர் 600 பவுண்கள் வரை நன்கொடை வழங்கியுள்ளனர். இன்னும் 400 பவுண்களையும் விரைவில் சேர்த்து விடுவேன் என்று நம்பிக்கை தெரிவித்த ஜாக் தனது முதுகில் இருந்த பை பற்றிய ரகசியத்தை வெளியிட்டார்.
உங்கள் உயிர் இருக்கும் வரை எப்போதும் நான் உங்கள் பக்கத்திலேயே இருக்க வேண்டும் என்று 95 வயதில் என்னை விட்டு பிரிந்த வெரோனிக்கா கூறினார்.
நானும், அப்படியே ஆகட்டும் என்று வாக்குறுதி அளித்து விட்டேன்.
இந்த ஸ்கை டைவிங் மூலம் நான் பத்திரமாக தரையில் கீழே வந்து சேர்வேனா..? அல்லது, மேல் லோகம் போய் விடுவேனா..? என்பது பற்றி எனக்கு உறுதியாக தெரியாது.
எப்படி ஆனாலும் சரி..என் மனைவிக்கு கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றியே தீரவேண்டும் என்ற வைராக்கியத்தில் இவ்வளவு காலமாக பாதுகாத்து வந்த அவளது சாம்பல் அடங்கிய பையையும் முதுகில் கட்டிக் கொண்டு குதித்து விட்டேன் என்று கூறி திகைப்பை ஏற்படுத்தினார், இந்த 93 வயது இளைஞர்.