யாழ். பல்கலைகழகத்தில் தற்காலிக அடிப்படையில் சேவையாற்றி வந்தநிலையில் இடைநிறுத்தப்பட்ட ஊழியர்களால் ஆரம்பிக்கப்பட்ட சாகும் வரையிலான உண்ணாவிரதம் கைவிடப்பட்டுள்ளது.
யாழ். பல்கலைகழகத்திற்கு முன்னால் நேற்று காலை 8 மணி முதல் இடைநிறுத்தப்பட்ட 17 ஊழியர்களும் சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர். ஆறு அம்ச கோரிக்கையை முன் வைத்து அவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
எனினும் யாழ். பல்கலைக்கழக பதிவாளர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட ஊழியர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து போராட்டம் இன்று மாலை 5 மணியுடன் கைவிடப்பட்டுள்ளது.
எதிர்வரும் 26ம் திகதி பல்கலைக்கழகத்தில் இடம்பெறும் கூட்டத்தில் இவர்களது பிரச்சினை தொடர்பில் பேசப்படும் எனவும் நியாயமான தீர்வு முன்வைக்கப்படும் எனவும் பதிவாளர் கொடுத்த வாக்குறுதியை தொடர்ந்து உண்ணாவிரதம் கைவிடப்பட்டுள்ளது.
இவ் ஊழியர்களது பெயர் விபரம் உயர் கல்வி அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் பதிவாளர் வாக்குறுதியளித்துள்ளார்.
இந்நிலையில் 26ம் திகதி தமக்கான தீர்வு முன்வைக்கப்படாவிடில் உண்ணாவிரத போராட்டத்தை தொடரவுள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் தெரிவித்தனர்.