நியூஸிலாந்திலுள்ள வங்கியொன்று வளர்ப்புப் பிராணிகளை வளர்க்கும் தனது பணியாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விநோதமான விடுமுறையை வழங்குவதாக அறிவித்துள்ளது.பெற்றோர்கள் தமது புதிதாக பிறந்த பிள்ளைகளைப் பராமரிப்பதற்கு வழங்கப்படும் விடு முறையை ஒத்ததாக இந்த விடுமுறை உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் பிரகாரம் ஆரம்ப கட்டமாக மேற்படி ஏ.என்.எஸ். வங்கியில் பணிபுரியும் வளர்ப்புப் பிராணிகளை வளர்க்கும் 21 பணியாளர்கள் தமது செல்லப் பிராணிகளை கவனித்துக் கொள்வதற்காக ஊதியத்துடன் கூடிய விடுமுறையைப் பெறவுள்ளனர்.இது தொடர்பில் அந்த வங்கியின் பேச்சாளரான சோனியா பெல் தெரிவிக்கையில், செல்லப் பிராணிகளின் விசுவாசம் பணியாளர்களிடம் செல்வாக்குச் செலுத்தும் ஒன்றாகவுள்ளதால் தமது வங்கி மேற்படி நடவடிக்கையை எடுத்துள்ளதாக கூறினார்.
வங்கியின் கிளைகளுக்கும் பணியாளர்களின் வசிப்பிடங்களுக்கும் உள்ள தூரம் மற்றும் வளர்ப்புப் பிராணிகளின் நிலைமை என்பவற்றின் அடிப்படையில் வழங்கப்படும் ஊதியத்துடன் கூடிய விடுமுறை சில மணி நேரமாகவோ அன்றி சில வாரங்களாகவோ அமையலாம் என அவர் தெரிவித்தார். ஏ.என்.எஸ். வங்கித் தலைமை அலுவலகம் மற்றும் கிளைகளில் சுமார் 9,000 பேர் பணியாற்றுகின்றனர்.