விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லுார் அருகே, கோவில் வேலில் செருகிய ஒரு எலுமிச்சை பழம் 23 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போனது. திருவெண்ணெய்நல்லுார் அடுத்த ஒட்டனந்தல் கிராமத்தில், இரட்டை குன்று மீதுள்ள ரத்தினவேல் முருகன் கோவில் கருவறையில், வேல் மட்டுமே அமைக்கப்பட்டு வழிபடுகின்றனர்.
கடந்த, 800 ஆண்டுகள் பழமையான இக்கோவிலில், ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா நடத்தி, ஒன்பது நாட்கள் வேலில் செருகிய எலுமிச்சை பழங்கங்களை, 11ம் நாளில் இடும்பன் பூஜையில் வைத்து ஏலம் விடுவர்.இப்பழத்தை சாப்பிட்டால் குழந்தை பாக்கியம் ஏற்படும் என்ற ஐதீகம்.
பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு நடந்த இடும்பன் பூஜையில், மார்ச் 25ம் தேதி முதல், ஏப்., 2ம் தேதி வரை, வேலில் செருகிய எலுமிச்சை பழங்கள் ஏலம் விடப்பட்டன.முதல் நாள் வேலில் சொருகிய எலுமிச்சை பழம், 23 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போனது; ஒன்பது எலுமிச்சை பழங்களும், 61 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போனது.