அமெரிக்காவில் கருவிலேயே இறந்துபோன ஒருவரின் விந்தணு மூலமாக மற்றொருவருக்கு குழந்தை பிறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்காவை சேர்ந்த ஒரு தம்பதியினர் செயற்கை முறையில் குழந்தை பெற்றுகொள்வதற்காக மருத்துவரின் உதவியை நாடினர். இதையடுத்து செயற்கை கருவூட்டலுக்காக கணவனின் விந்தணுவை சேமித்து, மனைவிக்கு செலுத்தப்பட்டது.
இந்த முயற்சியின் மூலம் அவர்களுக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. இந்நிலையில் குழந்தையின் ரத்தப் பிரிவை சோதித்தபோது, AB+ வகையை சேர்ந்தது என்பது தெரியவந்தது. பெற்றோர் இருவருமே A- ரத்தப் பிரிவை சேர்ந்தவர்கள் என்பதால் ஏதோ குளறுபடி ஏற்பட்டு விந்தணு மாறிவிட்டதாக தம்பதியினர் எண்ணினர்.
இதையடுத்து அந்த மருத்துவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். எனினும், விசாரணை முடிவில், இந்தத் தம்பதிகளின் விந்தணுக்களுக்குள் எவ்வித குளறுபடியும் நிகழவில்லை எனத் தெரியவந்தது. இதையடுத்து, சமீபத்தில் அந்த தந்தையிடம் மேற்கொண்டு பரிசோதனை செய்தபோது, ஒரு அதிர்ச்சி தகவல் தெரியவந்தது.
அதன்படி, குழந்தையின் தந்தை கருவாக உருவானபோது இரட்டையராக உருவாகினர் எனவும், அதில் ஒருவர் கருவிலேயே அழிந்துவிட்டதாகவும் தெரியவந்தது. ஆனால், அந்த சிதைந்துபோன குழந்தையின் டி.என்.ஏ. இவரது உடலுடன் சேர்ந்துள்ளது.அந்த டி.என்.ஏ. மூலமாகவே தற்போது குழந்தை பிறந்துள்ளது என்பது தெரியவந்துள்ளது. அதாவது கருவில் இறந்துபோன தனது சகோதரனின் குழந்தைக்கு அவர் தந்தையாகியுள்ளார்.கைமேரா (Chimera) என அறியப்படும் இந்தப் பிரச்சனை மிகவும் அரிதாகவே மருத்துவ உலகில் நிகழ்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.