எப்படி சிகரெட் பிடிக்கும் பழக்கத்தை விடுவது என வாயில் சிகரெட்டை வைத்த படியே யோசிப்வர்களுக்கு மத்தியில் தனது கடின முயற்சியால் அந்த தீய பழக்கத்தில் இருந்து மீண்டு வந்துள்ளார் ஒருவர்.
இதற்காக அவர் தனக்குத் தானே விஷேட தலைக்கவசம் ஒன்றையும் தயாரித்துள்ளாராம். அதை நாள் முழுவதும் தலையிலேயே மாட்டி புகைப் பழக்கத்திலிருந்து மீண்டு வந்திருக்கிறார் இப்ராஹிம் யூசுல் என்ற 42 வயது துருக்கி மனிதர்.
இவர் கடந்த 26 வருடங்களாக, தினமும் இரண்டு பக்கெட் சிகரெட் பிடிக்குமளவிற்கு புகைக்கு அடிமையாக இருந்துள்ளார். அதில் மீள எவ்வளவோ முயற்சிகள் மேற்கொண்டும் அனைத்தும் தோல்வியில் தான் முடிந்ததாம்.
தனது பிறந்த நாள், தனது பிள்ளைகளின் பிறந்த நாள், மனைவியின் பிறந்த நாள், அவரது மணநாள், புத்தாண்டு என ஒரு நாள் விடாமல் சிகரெட்டை விட்டு விடப் போவதாக சபதம் எடுப்பாராம் இப்ராஹிம். ஆனால் அந்த மன உறுதியெல்லாம் நான்கைந்து நாட்களில் காணாமல் போய்விடுமாம்.
என்ன செய்யலாம் என ஆழ்ந்த யோசனைக்குப் பிறகு கண்டறிந்தது தானாம் இந்த வயர் ஹெல்மெட். தானே அதனை வடிவமைத்தும் உள்ளார். இந்த வயர் ஹெல்மெட்டை காலையில் எழுந்ததும் தலையில் மாட்டிக் கொள்வாராம் இப்ராஹிம். பின் இரவுப் படுக்கப் போகும் போது தான் கழட்டி வைப்பாராம்.
இந்த ஹெல்மெட்டிற்கு இரண்டு சாவிகள் உண்டாம். ஒன்று அவரது மனைவியிடமும், மற்றொன்று அவரது மூத்த மகளிடமும் இருக்குமாம். சாப்பிடும் போது மட்டும் அவர்கள் திறந்து விடுவார்களாம். இப்ராஹிம்மின் தந்தை நுரையீரல் புற்று நோயால் பாதிக்கப்பட்டு காலமானாராம்.
தானும் அதுபோலவே தனது குடும்பத்தை தவிக்க விட்டு விடக் கூடாது என்பதாலேயே இந்த ஹெல்மெட் கண்டுபிடித்தாராம்.
பொது இடங்களில் இந்த ஹெல்மெட்டை அணிந்து செல்ல ஆரம்பத்தில் கொஞ்சம் தயக்கமாக இருந்ததாம்.ஆனால் இப்போது வெட்கமும் குறைந்து விட்டதாம் புகைப் பிடிக்கும் பழக்கமும் குறைந்து விட்டதாம்.