நாடுகடந்த தமிழீழ அரசியிலும் தமிழீழமும் எனும் தொனிப்பொருளில் கருத்தரங்கொன்று கனடாவில் இடம்பெறவுள்ளதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செய்திக்குறிப்பொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வட அமெரிக்க வாழ் தமிழ்மக்களின் பெருநிகழ்வாக ஆண்டுதோறும் இடம்பெற்று வரும் வட அமெரிக்க பேரவையின் தமிழ்விழாவின் உபநிகழ்வாக இக்கருத்தரங்கு இடம்பெறுகின்றது.
தமிழகத்தில் இருந்து பேராளர்கள் பலர் இக்கருத்தரங்கில் பங்கெடுத்துக் கொள்கின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் வெள்ளிக்கிழமை கனேடிய நேரப்படி மாலை 3 மணி முதல் 5 மணிவரை இக்கருத்தரங்கு இடம்பெறுகின்றது.
26வது ஆண்டாக இடம்பெறும் இப்பெருநிகழ்வானது, முதன்முறையாக கனேடிய மண்ணில் அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையும் கனடியத் தமிழர் பேரவையும் இணைந்து வழங்கும் ஏற்பாடு செய்துள்ளன.
இதேவேளை இப்பெருநிகழ்வில் சனல் 4 தொலைக்காட்சியின் ‘போர் தவிர்ப்பு வலையம்’ ஆவணத்திரைப்படம் காண்பிக்கப்படுவதோடு, இயக்குனர் கலம் மக்றேவும் நேரடியாகப் பங்கேற்று உரையாற்றவுள்ளார்.
ஈழத்தமிழரையும் தமிழ்நாட்டுத் தமிழரையும் அவர்கள் புலம்பெயர்ந்த தேசமொன்றில் இணைக்கும் பாலமாய் அமையும் பெற்னா தமிழ் விழாவில் அனைத்துத் தரப்பினருக்கும் ஏற்றவகையில் இயல் இசை நாடக நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
சிறப்பு நிகழ்வுகளாக நடனக் கலைஞர் பிரேம் கோபாலின் நடனம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனின் சிறப்புரை என்பனவும் இடம்பெறுகின்றன.
இந்நிகழ்வில் பங்கேற்கவென இரா.சம்பந்தன் இலங்கையில் இருந்து கனடா சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.